Main Menu

முதியோர் தினத்திற்கான சிறப்புக்கவி ( 01.10.2020)

ஐப்பசித் திங்கள் முதலாம் நாளை
ஐ.நா சபையும்அறிவித்து மகிழுது
சர்வதேச முதியோர் தினமாக
முதியோர் நலன் பேணவும்
மூத்தோரைப் போற்றவும்
முத்தாப்பாய் தந்ததே ஐ.நா வும் !

மூத்த குடிகளை மதித்து
ஆற்றிய பணிகளை நினைவூட்டி
அடிப்படைச் சுதந்திரங்களை வழங்கி
மூத்தோரின் தேவைகளைப் பூர்த்தியாக்கி
சட்டரீதியான பாதுகாப்பைக் கொடுக்க
உருவானதே முதியோர்தினம் !

அறிவுரைகளையும் ஆலோசனைகளையும்
அள்ளித் தந்த மூத்தோரை
அனுபவங்களைப் பாடங்களாய் தந்தோரை
ஆழுமைகளை எமக்குள் விதைத்தோரை
ஒழுக்கங்களை எமக்குப் புகட்டியோரை
ஒதுக்கி வைக்கலாமோ !

முதியோர் காப்பகங்களில்
மூத்தோர்கள் தவித்திருக்க
முகப் புத்தகங்களில்
வாழ்த்துக்களும் வர்ணனைகளும்
வக்கனையாய் தொடர்கிறது
இருக்கும் வரை வெறுத்து விட்டு
இறந்த பின்பு படையலும் விருந்தும்
ஒலமும் ஒப்பாரியும் வைப்பது
கண்துடைப்பு நாடகமே !

தலைமுறைகளின் விழுதுகளை
எமைத் தாங்கி நின்ற வேர்களை
தலை குனிய வைக்கலாமா?
கருவறையில் இடம் தந்தோரை
இருட்டறைக்குள் தள்ளலாமா ?
சிந்திப்போம் செயற்படுவோம்
மூத்தோரை மதித்திடுவோம்
மூத்தோர் நலன் பேணிடுவோம் !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...