Main Menu

“ எட்டயபுரத்துக் கவிஞன் (பாரதியென்ற கவிச்சாரதியின் நூற்றாண்டு நினைவுக்கவி)

எட்டயபுரத்துக் கவியை ஏட்டினைத் தொடவைத்த கவியை
மக்கள் கவியை மகாகவியை மானுடம் பாடிய கவியை
மரபினை மாற்றி புதுக்கவிதையைத் தோற்றுவித்த கவியை
சிந்தனைக்கு வளம் சேர்த்த கவியை சீர்திருத்தக் கவியை
பாப்பாப்பாட்டு பாடிய கவியை புதுமை படைத்த புரட்சிக்கவியை
புதிய தமிழகத்தை உருவாக்க கனவுகண்ட கவியை
புரட்டாதித் திங்கள் பதினொன்றில் நூற்றாண்டு நினைவலையில்
நினைத்திடுவோம் நாமும் பாரதியாம் கவிச்சாரதியை !

முறுக்கு மீசைக்காரன் முண்டாசுக் கவிஞன்
நறுக்காகப் படைத்தானே நல்விருந்துப் படையல்கள்
தமிழின் இனிமையைப் பறைசாற்றி பெண்ணியம் போற்றி
நவீன உரைநடைக்கும் கவிதைக்கும் தந்தையாகி
கண்ணன்பாட்டு குயிற்பாட்டு பாஞ்சாலிசபதம் படைத்து
தமிழுக்கு அணி சேர்த்தாரே !

இருண்டு கிடந்த மக்கள் வாழ்விற்கு
எழுத்தினால் வெளிச்சம் கொடுத்த கவிஞனை
சுதந்திர கீதமிசைத்த சுந்தரக் கவிஞனை
தேசக்கவிகள் விடியல்கவிகள் யாத்த நேசக்கவிஞனை
சாதிபேதத்தை கவிச்சாட்டையால் அடித்த சாகசக் கவிஞனை
அறியாமையை அச்சத்தை அடிமையை ஒழித்த கவிஞனை
பாட்டாலே பண்ணிசைத்த பாரதியாம் எம் கவிச்சாரதியை
நூற்றாண்டு நினைவலைகளில் நினைவிற் கொள்வோம் நாமும் !

“கவி….ரஜனி அன்ரன் (B.A) 11.09.2021

பகிரவும்...