Main Menu

“உயிரைக் குடிக்கும் புகை “(சர்வதேச புகையிலை ஒழிப்புத் தினத்திற்கான சிறப்புக்கவி ) 31.05.2021

உயிர் இழப்புக்களைத் தடுக்கவும்
விழிப்புணர்வை ஏற்படுத்தவும்
வைகாசித் திங்கள் முப்பத்தியொன்றை
வையகத்திற்கு அறிமுகமாக்கி
ஐ.நா.சபையும் அமுலாக்கியதே
சர்வதேச புகையிலை ஒழிப்புத் தினமாக !

மனித உயிரைக் குடிக்கும் மாயாவி
புனித வாழ்வைக் குட்டிச் சுவராக்கும் சாத்தான்
உடல் நலத்தை கெடுக்கும் கெட்டகிருமி
மன வளர்ச்சியைப் பாதிக்கும் புகையிலை
மனிதனைப் போதைக்கு அடிமையாக்கி
ஆயுட் காலத்தை அபகரித்து
உயிரைக் குடிக்கும் அரக்கனாகிறானே !

எத்தனை தடைகளைத் தானும்
சூக்குமமாய் அரசு வெளியிட்டாலும்
புகைப்பவர் வீதம் குறைந்தபாடில்லை இன்னும்
புகைப் பொருட்களின் விற்பனையும்
மிகையாகிப் போகிறது தொடர்ந்தும்
உயிரிழப்பும் மேலோங்கி செல்கிறதே !

அலை பாயும் மனமே
புகைத்தலுக்கு காரணமாகி
அடிமையாக்குது மனிதரை
மனதை ஒருமுகப்படுத்தி
தியானம் யோகா செய்தால்
புகைப் பழக்கத்திலிருந்து
விடுபட்டுக் கொள்ளலாமே முற்றாக !

புகையைக் குடிக்கும் மனிதா
புகை உன்னையும் குடித்து
புவியில் உள்ளவரையும் குடித்து
சுற்றுப் புறத்தையும் மாசுபடுத்தி
சந்ததிகளையும் அழித்து
சதி செய்கிறதே தெரியுமா உனக்கு
உடல்நலம் பேண உயிரைக் காக்க
உறுதியெடு புகைத்தலை நிறுத்து
புகையே உனக்குப் பகை !

-ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...