Main Menu

“துளிநீர்” சர்வதேச தண்ணீர் தினத்திற்கான சிறப்புக்கவி 24.03.2022

நீலவானத் திரை விலத்தி
வான்மகளை முத்தமிட்டு
வானம் விட்டு மெல்லக் கீழிறங்கி
கதிரவன் ஒளியில் கண்சிமிட்டி
கடலலையில் மோதித் தெறித்து
காற்றின் வேகத்தில் திவலையாய் சிதறி
துளித்துளியாய் நிலத்தில் விழுமே மழைத்துளி !

அண்டத்தை எழுபது வீதத்தில் ஆட்சி செய்து
கண்டங்கள் எல்லாம் நிறைந்து
அகிலத்தை அசைத்தும் இசைத்தும் நின்று
துளிநீராய் மண்ணில் விழுந்து பெருவெள்ளமாகி
ஏரி குளங்களை நிறைத்து வனப்பாக்குமே
துளிநீரையும் வீணாக்காது மழைநீரைச் சேமித்து
புவித்தாய்க்கு வளம் சேர்ப்போம் !

வேளாண்மை செழிக்க விளைச்சல் பெருக
வழி காட்டுமே துளி நீர்ப்பாசனம்
இன்றும் உலகின் கடைக் கோடிகளில்
துளிநீரின்றி குடிநீருக்காக மக்கள் தவிப்பு
விழிநீர் துடைக்கும் துளிநீர்த் திவலையே
நீ இல்வையேல் நாம் இல்லையே
இன்னுயிர் காக்கும் உயிராயுதம் நீயே !

ரஜனி அன்ரன் (B.A) 24.03.2022

பகிரவும்...