Main Menu

” புனிதத்தாய் அன்னை திரேசா ” (நினைவுக்கவி)

அன்பின் உருவமாய் ஆற்றலின் வடிவமாய்
பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய்
தொழு நோயாளிகளின் கொழு கொம்பாய்
பழுக்களைச் சுமந்து பாவிகளை ஆதரித்து
புகலிடம் கொடுத்த புனிதத்தாய்
அன்னை திரேசா புரட்டாதித் திங்கள் ஐந்தில்
இவ்வுலகை விட்டு நீங்கினாரே !

இனமொழி கடந்து ஏற்ற இறக்கம் பாராது
ஆசாபாசங்கள் விடுத்து அகிலத்தை அணைத்து
அன்புமொழி கொடுத்த தொண்டின் இமயம்
காருண்ணியத்தின் கலங்கரை விளக்கு
மனிதத்தை நேசித்த புனிதத்தாயை
மனதிலே நினைத்திடுவோம் என்றும் !

அல்பானிய மண்ணிலே பிறந்தாலும்
ஆதரவு அற்றவர்களுக்காகவே
அன்பின் கங்கையாகி
களங்கமின்றி கல்கத்தா சென்று
காப்பகமும் அமைத்து
கடமைகளைச் செய்து
தன் வாழ்வையே அர்ப்பணித்தாரே !

தள்ளாத வயதினிலும் தளராத துணிவோடு
நாடி வந்தோர்க்கு நல்லாதரவு கொடுத்த
மனிதநேயத்தின் புனிதத் தாயை
புனிதசேவை ஆற்றிய புனிதரை
புனிதப் பட்டத்தையும் பெற்ற புனிதத்தாயை
புனிதமாய் நினைத்திடுவோம் !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A ) 05.09.2019

பகிரவும்...