Main Menu

ப.சிதம்பரத்திற்கு முன்பிணை வழங்கியது சிறப்பு நீதிமன்றம்!

ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர்
ப .சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோருக்கு முன்பிணை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவில், இருவருக்கும் முன் பிணை வழங்கப்படுவதாகவும்,  வெளிநாடு செல்வதற்கு முன் நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில், சாட்சிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பதுடன் விசாரணை அமைப்புகளுக்கு இருவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவருக்கும் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சொந்த பிணையும் சரீர பிணையாகவும் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிகாலத்தில் மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்தது.

இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கு கார்த்திக் சிதம்பரம் உதவியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுகுறித்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ அமைப்பும், அமுலாக்கத்துறையினரும் இணைந்து கடந்த ஜுலை மாதம் 19ஆம் திகதி ஆரம்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...