Main Menu

“கறுப்பு யூலையின் நெருப்பு நினைவுகள்”

எண்பத்தி மூன்று ஆடியில்
ஆடித்திங்கள் இருபத்திமூன்றில்
அரங்கேறிய அனர்த்தங்கள்
கறுப்பு யூலையின் நெருப்பு நினைவுகள்
வெறுப்பாகி நீறு பூத்த நெருப்பாகி
தணலாகக் கொதிக்கிறதே இன்றும் !

இனவாதம் தூண்டப்பட்டு
அரசியல் இலாபம் பேணப்பட்டு
கொலைகள் அரங்கேறப்பட்டு
குளிர் காய்ந்த கொடியநாள்
கறுப்பு யூலையின் கனத்தநாள்
நெருப்பாக நினைவுகள் சுட்டெரித்த நாள்
ஆடித்திங்கள் இருபத்திமூன்று !

வன்முறைகளும் படுகொலைகளும்
உயிரிழப்புகளும் உடமைகள் சேதமும்
ஒட்டு மொத்தமாய் அரங்கேறிய நாள்
குருதியாறு பாய்ந்த நாள்
குற்றுயிர்களும் துடித்த நாள்
ஆடித்திங்கள் இருபத்திமூன்று !

வலியது மேவி
உளமது வெந்து
உணர்வுகள் உறைந்தநாள்
சகதிகள் கடந்து
அகதிகளாய் ஓடிய அவலநாள்
குருதியால் எழுதப்பட்ட வரலாற்று நாள்
தமிழர் வாழ்வில் கறைபடிந்த நாள்
காலத்தால் அழியாத காவியநாள்
கறுப்பு யூலையின் நெருப்புநாள் !

கண்டங்கள் பல தாண்டி
எம்மவர்கள் புலம்பெயரவும்
அகதி அந்தஸ்த்து கோரவும்
ஆழுமையோடு வாழவும்
அடியெடுத்துக் கொடுத்த போதும்
ஆடித் திங்கள் இருபத்திமூன்று
கறுப்பு ஆடியாய் கனத்த ஆடியாய்
மனத்திலே நின்று நெருப்பாகி
நிழலாடுதே நினைவுகளாய் இன்றும் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 23.07.2020

பகிரவும்...