Main Menu

“ஈழப்பெண்கள் எழுச்சி நாள்”


கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 10.10.2019

உன்னதர்கள் நாளாம் இந்நாள்
ஐப்பசித் திங்கள் பத்து
மண் வீரம் காத்து
முதல் மறப் பெண்ணாய்
மண்ணிலே காவியமாகிய
புரட்சிப் பெண் மாலதியின்
எழுச்சி நாள் இன்று
ஈழப்பெண்கள் எழுச்சி தினமாகியதே !

முதல் வீர மறப் பெண்ணாய்
புதுநானூறு படைத்த புரட்சிப் பெண்ணாய்
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்
விடியலின் சுடராய்
வீறு கொண்டு எழுந்து
வீரத்தோடு போரிட்டு
மண்ணிலே வித்தாகிய நாள்
பெண்ணினம் விழித்த நாள் !

மண்ணுக்குள் விதையான
உன்னதர்கள் வரிசையிலே
பெண்ணுக்குள் இவளே முதல் மாதரசி
மண்ணின் மலர்வினையும்
பெண்ணின் விடிவினையும்
கண்ணாக எதிர் கொண்டாள்
கனவோடு புறப்பட்டாள்
களமாடி மடிந்தாளே !

அரசியலில் அங்கம் வகிக்கவும்
அடக்குமுறைகளை உடைக்கவும்
உரிமைகளைப் பெறவும்
தலைநிமிர்ந்து வாழ்வதற்கும்
அடி நாதமாய் விளங்கியது
ஈழப் பெண்கள் எழுச்சியே
எழுச்சிக்கு அத்திவாரமிட்டாள்
உன்னதப் புரட்சிப்பெண் மாலதி !

ஆண்டுகள் முப்பத்தியிரண்டு
கடந்த போதும் மாலதியின் வீரம்
மாண்புடனே நினைவாகி
வரலாற்றுப் பெட்டகமாகி
காவியமாய் மிளிர்கிறதே
இன்று ஈழப்பெண்கள் எழுச்சி தினமாக !

கவியாக்கம்: ரஜனி அன்ரன் (B.A) 10.10.2019

பகிரவும்...