Main Menu

“மே தினத்திற்கான சிறப்புக்கவி”


மேதினியில் மேதினம்
மே ஒன்றில் மேம்பட
உழைப்பாளிகள் ஒருமித்து
ஒன்று கூடிக் குரல் கொடுத்து
போர்க்கொடி தூக்கி போராடி
மேன்மையோடு பூத்தது
மேலான உழைப்பாளிகள் தினம் !

அடிமை வாழ்வும்
வேதனக் குறைப்பும்
வேலைப்பழுவும் முதலாளித்துவமும்
ஆதிக்கம் செலுத்திய வேளை
வெடித்தது சிக்காக்கோவில்
தொழிலாளர் புரட்சி !

உரத்த குரலில் போராடி
உழைக்கும் வர்க்கத்திற்காகவே
கண்டனம் செய்தனர் தொழிலாளர்கள்
கிடைத்தது வெற்றி மேதினியில்
சிறப்பைப் பெற்றது மேதினமும் !

மே தினமே – நீ
அகிலத்தின் அரங்கை அலங்கரித்து
ஆழும் வர்க்கத்தினருக்கு
ஆழுமையான பாடம் புகட்டுகிறாய்
அவனி இயங்க உழைப்பினைக் கொடுத்து
அனைவரையும் வாழ வைக்கிறாய்
அர்ப்பணமும் செய்கிறாய்
நீ இன்றி உலகேது ?

உழைப்பு என்ற முதலீட்டை இழந்து
உரிமைகளை வென்றெடுத்த
உழைப்பாளர்களின் உன்னத தியாகமும்
சிந்திய குருதியும் வடிந்த வியர்வையும்
தந்ததே வரலாற்றில் மேதினமாய் !

இன்று நாம் அனுபவிக்கும்
எட்டுமணி நேர வேலையும்
ஓய்வும் விடுமுறையும்
அன்று உழைப்பாளிகள்
சிந்திய செங்குருதியே
நம்மில் எத்தனை பேர் தான்
இதை நினைத்துப் பார்க்கிறோம் ?

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)  01.05.2020

பகிரவும்...