Main Menu

மரண ஒத்திகை

எனக்கான அழைப்பு வந்துவிட்டது
கையூட்டு கொடுத்து காரியம்
சாதிக்க முடியாது அங்கே
நாட்கள் நத்தை போல்
நகர்ந்ததாக நினைவிலில்லை
எனது வாழ்க்கை கோப்பை
நிரம்பி வழியவில்லை
எனது மரணமொன்றும்
உலகுக்கு இழப்பில்லை
வாழ்க்கை என்னை
சாறாகப் பிழிந்து
என்ன சாதிக்க நினைத்ததோ
துயரங்களை மூட்டையாகச் சுமந்து
உடல் கோணிப் போனது
எனது உறுப்புகள்
எனது கட்டளைக்கு
இணங்க மறுத்தன
இவ்வுலகத்தில் எனது இருப்பு
கேள்விக்குறியானது
மரணத்திற்குப் பிறகு வாழ்வுண்டா
என்ற கேள்விக்கு விடை
கிடைக்கப்போகிறது
வாழ்க்கையெனும் மைதானத்தில்
மற்றவர்கள் கால்களில் உதைபடும்
பந்தாகத்தான் இருக்க முடிந்தது.

– ப. மதியழகன்

பகிரவும்...