Main Menu

“ மனித உரிமை “ 10.12. 2020 (மனித உரிமை தினத்திற்கான சிறப்புக்கவி)

மார்கழித் திங்கள் பத்து
மானிடர் உரிமை பேணும்
மனித உரிமை நாள்
மனித உரிமை பிறப்பின் உரிமை
மறுப்பதும் பழிப்பதும் வீணர்கள் வேலை
மனித உரிமை மறுக்கப்பட்டால்
விழிக்க வேண்டுமே உலகமும்
ஒழிக்க வேண்டும் உரிமை மீறல்களை !

புயலுக்குப் பின் அமைதி போல்
உலகப் போர்களுக்குப் பின்னே
உதயமானதே மனித உரிமை நாள்
நொந்து போன உள்ளங்களுக்கு
மருந்தானதே மனித உரிமைகள்
மகத்துவம் பேணப்படுகிறதா என்றால்
மறுப்பதற்கு ஏதுமில்லை
கேள்விக்குறி தான் !

உரிஞ்சு போன உரிமைகளால்
குலைஞ்சு போச்சே கூடுகளும்
நலிஞ்சு போச்சே நம்மினமும்
மலிஞ்சு போச்சே மனிதஉரிமை மீறல்களும்
மோதல்களும் வன்முறைகளும்
முட்டி மோதி வெடிக்கிறதே
தொடர்கதையாய் தொடர்கிறதே !

தொழிலாளர் மீது வன்முறைகள்
பெண்கள் மீதான கொடுமைகள்
சாதி மதப் பிரிவினைகள்
பாகுபாடுகள் வேறுபாடுகளென
தொடர்கிறதே தினமும் !

உருக்குலைந்து போகிறது உரிமைகள்
மறைக்கப்படுகிறது உண்மைகள்
உண்மையை உரைத்திட்டால்
உணர்வாய் எழுந்திட்டால்
தட்டிக் கேட்டால்
வெடிக்குது வன்முறை !

பாகுபாடு காட்டாது
பாரபட்சம் பார்க்காது
மனிதரை மனிதராய்
மதித்து வாழ்ந்தால்
பேணப்படுமே மனித உரிமை
மனித உரிமை பிறப்பின் உரிமை
பிறப்பின் உரிமையைப் பேணிடுவோம் !

பகிரவும்...