Main Menu

மகாத்மா என்ற மாமனிதன்! (நினைவுக்கவி)

அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்து
அகிம்சை எனும் ஆயுதத்தை கையிலேந்தி
அறிவுச் சுடராய் அரசியல் மேதையாய்
சுதந்திரத்தை சுவீகரித்த மகானாய்
சுதந்திர உணர்வைத் தட்டியெழுப்பிய வீரராய்
வாழ்ந்த மகானை தைத்திங்கள் முப்பதில்
சுட்டு வீழ்த்தினானே கயவன் ஒருவன் !
எளிமையின் வடிவமாய் ஏழைகளைக் காத்து
தொண்டின் இமயமாய் தோழமை பேணி
தியாகச் சின்னமாய் தீண்டாமையை ஒழித்து
சத்தியசோதனை தந்த நித்திய மகானாய்
சத்தியாக்கிரகம் செய்த உத்தம சீலராய்
உலகம் போற்ற வாழ்ந்தாரே
மகாத்மா என்ற மாமனிதன் !
அண்ணலின் அமைதியும்,கனிவுமொழியும்
புன்னகை சிந்தும் பொக்கை வாயும்
தியாக சிந்தனையும்,தீவிர நாட்டமும்
மாந்தருள் மாணிக்கமாய், மகானாய்
மண்ணுலகில் ஆக்கியதே தேசபிதாவாய்
தியாகங்கள் பல செய்த மகானின்
நினைவு நாளே தியாகிகள் தினமாச்சு
இந்திய மண்ணிலே
மகான் காந்தியைப்
போற்றுவோம் நாமும் !

கவியாக்கம்..(B.A)…ரஜனி அன்ரன் 30,01,2021

பகிரவும்...