Main Menu

“புத்தகங்கள் என்றும் பொக்கிஷங்கள்” சர்வதேச புத்தக தினத்திற்கான சிறப்புக்கவி

இலக்கியத்தின் உயிர்நாடி
வரலாற்றில் பொக்கிஷமாகி
சித்திரைத் திங்கள் இருபத்திமூன்று
சர்வதேச புத்தக தினமாகி
புத்தகங்களைக் கொண்டாடும் தினமாகி
வாசிப்பும் நேசிப்பும் சுவாசிப்பும்
வாழ்வியல் பொக்கிஷங்களாகி
வனப்பாக்குதே புத்தகங்கள் !

அழகான அட்டைப்படம்
உள்ளே அச்சிடப்பட்ட காகிதம்
தொட்டதை எடுத்து மனதைப் பதித்து
தொடர்ந்து தொடர்ந்து படித்தால்
வெற்றியின் மகுடம் – அதுதான்
புத்தகம் எனும் பொக்கிஷம் !

தலைமுறைகளின் விழுமியங்களை
கலை கலாச்சாரங்களை
காலப் பெட்டகங்களை
வரலாற்றுத் தடங்களை
எழுத்து வடிவில் எமக்குத் தந்து
எமை ஆளாக்கும் பொக்கிஷங்கள் புத்தகங்களே !

காலையில் பூபாளமாய்
மதியத்தில் ஆனந்தாவாய்
இரவில் பஞ்சமாவாய்
எம்மோடு இசை பாடி
எமைத் தூங்க வைக்குமே
பொக்கிஷமான புத்தகங்கள் !

சிந்தனையின் தூண்டுகோலாகி
அறிவுலகின் திறவுகோலாகி
வாழ்க்கையை மாற்றும் நெம்புகோலாகி
வாழ்வினைத் தாங்கும் ஊன்றுகோலாகி
மெளனமாய் பயணிக்குதே
பொக்கிஷமான புத்தகங்கள் !

மனதை ஒருமுகப்படுத்த
மனக் கசப்புக்களை அகற்ற
தனிமையைப் போக்க
துயர் தீர்க்கும் அருமருந்து
புத்தகம் எனும் மாமருந்து
பொக்கிஷமான நல்விருந்து !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 23.04.2020

பகிரவும்...