Main Menu

“நாமா கடைசித் தலைமுறை ? “

உள்நாட்டுப் போரில்
உறவுகளை இழந்து உள்ளமும் நலிந்து
உடமைகளைத் தொலைத்து
போரின் வடுக்களைச் சுமந்து
ஏதிலிகளாய் இடம் பெயர்ந்தோம்
தாய் நிலத்தை விட்டு புலத்திற்கு
அமைதி வாழ்வு தேடி !

போரோடு வாழ்ந்த காலமும்
வேரோடு அழிக்கப்பட்ட தருணமும்
பட்ட துயரமும் பாரிய இழப்புகளும்
பதுங்கு குழி வாழ்வும் பயமும்
மாறாத வடுக்களாச்சு எம்வாழ்வில்
மாற்றத்தை தேடிவந்தோம் புலத்திற்கு
புலத்திலும் அமைதியில்லை இப்போ !

உலகம் அமைதியாக இருக்க
வன்முறைகள் போர்களைத் தடுக்க
உலக அமைதி நாளை
உருவாக்கியதே ஐ.நா.வும்
ஆனாலும் அமைதி பேணியதாக
அறியவில்லையே நாம் இன்னும் !

அரசியல் மாற்றங்களும்
அரசல் புரசல்களும்
அதிகார வர்க்கத்தின் ஆட்சியும்
சதிகார சூழ்ச்சிகளும்
ஆங்காங்கே பனிப்போர்களும்
தனிநபர் காழ்ப்புணர்வுகளும்
தலைதூக்கி நிற்கிறதே
அமைதியைத் தேடியபடி நாமும் !

அடுத்த தலைமுறைகள்
அடுத்த கட்ட நகர்வை நோக்கி
நகர முடியாத நிலை
வன்முறைகளும் வாக்குவாதங்களும்
அடிக்கடி தொடர்கிறது
வெடித்துச் சிதறுகிறது
கடைசித் தலைமுறை நாம் தானோ ?
கனவாய் போகாதோ இது ?

அமைதிப் பூக்கள் மலரட்டும்
அமைதிப் புறாக்களும் பறக்கட்டும்
நீதிக்கான போராட்டங்கள்
அமைதியாய் தொடரட்டும்
வன்முறைகள் ஒழியட்டும்
தலைமுறைகள் வாழட்டும்
உலகம் அமைதி பெறட்டும் !

“ உலக அமைதி தினத்தை முன்னிட்ட சிறப்புக்கவி “

கவியாக்கம்…… ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...