Main Menu

தேடியும் வாடியும்…… கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)

ஆண்டுகள் பலவாய்
ஆறாத் துயரத்தோடு
ஆழ நெஞ்சுக்குள் புதைத்து
மீள முடியாமல் தவித்து
கண்ணீர் கடலில் மிதந்து
காணாமற் போன உறவுகளைத் தேடி
கதறுகின்றனரே அன்னையர்கள் !

தேடித் தேடி அலைந்தும்
நொந்து நூலாக வாடியும்
வழிமேல் விழி வைத்து
இன்று வருவார் நாளை வருவாரென
காத்திருப்போடு இன்றும் அன்னையர்கள்
காலம் பதில் சொல்லுமா ?

நெஞ்சுக்குள் சுமைகளைச் சுமந்து
நிம்மதி இன்றித் தவித்து
வீதியிலே நின்று போராடி
போட்டோவும் கையுமாய்
எங்கே என் பிள்ளையென்று
ஏங்கித் தவிக்கின்றனரே அன்னையர்கள் !

வாழ்வில் பாதியைத் தொலைத்து
வாழ வழியின்றித் தவித்து
நாளும் பொழுதும் உறக்கமின்றி
நாதியற்று அலைகிறார்களே வாடி
பேதையுள்ளங்கள் தம் பிள்ளைகளைத் தேடி !

மன அழுத்தங்கள் வாட்ட
மனக் குமுறல்கள் வெடிக்க
ஆயிரம் நாட்களையும் தாண்டி
ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்க
அரசோ வாய்மூடி மெளனியாய் இருக்கிறதே
அப்பாவி அன்னையர்களின் உயிர்களும் பறி போனதுவே !

ஐ.நா.சபையே பதில் சொல்லு
பொய் நா கொண்டு உரைக்காதே
காணாமற் போன உறவுகளை வைத்து
கண்கட்டி வித்தை காட்டாதே
தாய்க் குலத்திற்கு தீர்வு சொல்லு
தர்மத்திற்கு என்றும் தலை வணங்கு !

பகிரவும்...