Main Menu

“ அதிசய உலகம் “ கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A)

உலகத்தின் இதயமாய்
அகிலத்தின் சுவாசமாய்
இயற்கையின் கொடையாய்
அதிசய உலகமாய்
அழகோவியமாய் காட்சி தந்த
அமேசன் மழைக்காடுகள்
அக்கினிப் பொறிக்குள் பொசுங்கியதே !

பழங்குடிகளின் வாழ்விடம்
பறவை விலங்குகளின் புகலிடம்
பசுமை கொழித்த சோலைவனம்
பறக்கும் ஆறு என
பிறேசில் நாட்டின் தனித்துவம்
பற்றியெரிகிறதே புகைமண்டலமாய் !

அகிலத்தின் பெரும் காடு
அதிசயமான மழைக்காடு
அமேசன் நதியோடு
ஆற்றுப் படுக்கைகளையும்
அழகழகாய் கொண்ட நாடு
சுடுகாடானதே சுட்டெரித்த தீயினால்
அக்கினியோடு சங்கமமாகியதே
அமேசன் மழைக்காடு !

அரியவகை உயிரினங்கள்
ஆயிரமாயிரம் தாவர இனங்கள்
அற்புதமான மூலிகைச் செடிகள்
மில்லியனையும் தாண்டிய பூச்சியினங்கள்
காணக் கிடைக்காத பறவைகள் விலங்குகள்
பிராண வாயுச் சுரங்கமென
அரிய பல பொக்கிஷங்கள்
அழிந்து போனதே தீச்சுவாலையில் !

வளிமண்டலம் எங்கும் புகைமூட்டம்
ஒளி கொண்ட பூமி இருள்மயம்
விழி கொண்டு பார்க்க முடியாத நிலவரம்
களிப்போடு இருந்த மக்கள் கதறும் காட்சி
பசுமை கொழித்த மழைக்காடு
பற்றி எரிகிறதே கட்டுக்கடங்காத தீயினால்
அதிசய உலகம் இப்போ ஆறாத்துயரில் !

பகிரவும்...