Main Menu

தியாக மைந்தன் திலீபன் (நினைவுக்கவி)

தேரோடும் வீதியிலே
நல்லூரான் முன்றலிலே
ஊரே திரண்டிருக்க
ஊரெழு பெற்ற மைந்தன்
பன்னிருநாள் யாகத்தில்
தியாக வேள்வியில்
இன்னுயிரைத் தியாகம் செய்தானே
புரட்டாதித் திங்கள் இருபத்தியாறினிலே !

தேசம் மலர தேசீயம் வாழ
கோரிக்கை ஐந்தினை வைத்து
காணிக்கை ஆக்கிய தியாகியே
உயிரை உருக்கி உணர்வினைப் பிழிந்து
உலகிற்கு வெளிச்சம் தந்த
ஊரெழுவின் மெழுகுவர்த்தியே
தியாகத்தின் உச்சத்தை வென்ற
உன்னத தியாகி நீதான் ஐயா !

மக்கள் புரட்சிக்கு வித்திட்ட
அகிம்சையின் அண்ணலே
தியாகத்திற்கு இலக்கணமானவன் நீ
தியாகத்திற்கு வரலாறு படைத்தவன் நீ
தியாகத்திற்கு புது வேதம் எழுதியவன் நீ
மகா யாகத்தையும் விஞ்சியது
உன் தியாகமே
மறக்க முடியுமா ?

பாரததேசம் பாசாங்கு காட்டி
பார்த்தீபனின் கோரிக்கையை
பாராமுகம் ஆக்கியதே
பன்னிருநாள் வேள்வியில்
பார்த்தீபனின் உயிரும்
நாம் பார்த்திருக்க ஆகுதியானதுவே !

ஆண்டுகள் முப்பத்தியிரண்டு
தாண்டிய போதும்
தியாக மைந்தனின் தியாகம்
தீயாக இருக்கிறதே இன்றும்
தியாக மைந்தனை நினைத்திடுவோம்
தியாகங்களைப் போற்றிடுவோம்
தீபம் ஏற்றிடுவோம் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...