Main Menu

மோடியை இந்தியாவின் தந்தை என்றழைத்து காந்தியை அவமதிப்பதா? – ஒவைசி

பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை என்று அழைத்ததன் மூலம் மகாத்மா காந்தியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவமதித்து விட்டதாக அசாதுதீன் ஒவைசி குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் நகருக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தார்.

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நட்புறவு முன்னர் எப்போதும் இருந்ததைவிட அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட டிரம்ப், ‘முன்னர் இருந்த இந்தியாவை நான் அறிவேன். தனிப்பட்ட முறையில் இல்லை என்றாலும் முன்னர் இருந்த இந்தியா மிகவும் பிளவுப்பட்டு கிடந்தது. ஏராளமான மோதல்கள் இருந்தன. அவற்றை எல்லாம் மோடி ஒன்றிணைத்தார்.

இந்தியாவின் தந்தையைப்போல், ஒரு தந்தை ஒன்று சேர்ப்பதைப்போல் அவர் ஒன்று சேர்த்தார். அவரை நாம் இந்தியாவின் தந்தை என்று அழைப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.டிரம்ப்பின் இந்த கருத்தை மத்திய மந்திரிகளும் பாஜக பிரமுகர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட பிறகட்சியினர் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டிரம்ப்பின் பேச்சுக்கு இன்று கண்டனம் தெரிவித்துள்ள ஐதராபாத் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி, பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை என்று அழைத்ததன் மூலம் டிரம்ப் மகாத்மா காந்தியை அமெரிக்க அதிபர் டொனால்ட் அவமதித்து விட்டதாக  குறிப்பிட்டுள்ளார்.

’டிரம்ப்புக்கு நமது விடுதலை போராட்டத்தை பற்றிய ஞானம் கிடையாது.  ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற உயர்ந்த தலைவர்களுக்கு கூட இதைப்போன்ற பட்டங்கள் அளிக்கப்பட்டதில்லை. மகாத்மா காந்தியுடன் ஒப்பிட முடியாதவர் என்பதால் மோடி இந்த நாட்டின் தந்தை ஆகிவிட முடியாது.

இதன் மூலம் இந்தியாவின் மரபை டிரம்ப் இழிவுப்படுத்தி விட்டார். மோடியையும் புகழ்ந்து, இம்ரான் கானையும் புகழ்ந்து டிரம்ப் ‘டபுள் கேம்’ ஆடுகிறார். டிரம்ப்பின் இந்த இரட்டை ஆட்டத்தை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

டிரம்ப் கூறியது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் என நான் நம்புகிறேன்’ எனவும் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

பகிரவும்...