Main Menu

“ தந்தையென்ற மந்திரம் “ ( தந்தையர் தின சிறப்புக்கவி )

தந்தை என்ற வார்த்தைக்குள்
மந்திரங்கள் ஆயிரம்
சிந்தை நிறைந்த தந்தையின்
விந்தைகளோ பாயிரம்
பாசத்தையும் விஞ்சி நிற்கும்
தந்தையென்ற இயந்திரம் !

முகவரிக்கு முதலெழுத்தாகி
முழுமதியாக எமை நிறைத்து
முழு மூச்சாகவே காத்து
முனைப்போடு சுமையைத் சுமந்து
அவனியிலே நாம் உயர்ந்திருக்க
அச்சாணியாய் தாங்கி நின்றவர் !

நெஞ்சிலும் தோளிலும்
நேர்த்தியாய் சுமந்தவர்
பிஞ்சுவிரல் பிடித்து
அஞ்சாமல் அகரம் பதித்தவர்
துஞ்சாமல் அரசபணி செய்த
நெஞ்சமெல்லாம் நிறைந்த
நேசமான எம் தந்தை !

தன் தூக்கம் தொலைத்து
எமைத் தூங்க வைத்தவர்
தடுமாறி விழுந்த போது
தன் கை கொடுத்தவர்
விரல் கோர்த்து நடந்தவர்
வீரத்தைப் புகட்டியவர்
குறுகிய காலமே எம்மோடு வாழ்ந்தவர்
குதூகல இன்பத்தை அள்ளியே தந்தவர் !

தனக்கென வாழாது எமக்கென வாழ்ந்து
தாயோடு சேர்த்து எம்மையும் சுமந்து
கண்டிப்பை வெளியில் காட்டி
கருணையை மனதில் பூட்டி
எம்முயிராக அன்னை இருக்க
உடலாக இருந்தவர் எம் தந்தையே !

மெழுகுவர்த்தியாகி ஒளி தந்த
தந்தையே தியாகத்தின் சுடர் நீவிர்
தந்தையென்ற மந்திரம்
தாரணியின் இயந்திரம்
தந்தையே உனைப் போற்ற
தரணியில் ஒருநாள் போதாதே !

கவியாக்கம்…..ரஜனி அன்ரன் (B.A) 21.05.2020

பகிரவும்...