Main Menu

சர்வதேச குடும்ப தினத்திற்கான சிறப்புக்கவி

குடும்பத்தில் சமத்துவம் மிளிரவும்
கூடிக் குலாவவும்
மனம் விட்டுப் பேசவும்
ஒருவருக்கு ஒருவர்
தினமும் நட்பினைப் பேணவும்
குடும்பத்திற்கு என ஒருதினத்தை
குதூகலமாய் ஆக்கியதே ஐ..நா,வும்
வைகாசித் திங்கள் பதினைந்தினை !

சந்தோஷங்கள் சின்னச்சின்ன சிணுங்கல்கள்
செல்லச் சண்டைகள் சமாதானங்கள்
அன்பு பண்பு பாசம் நேசம் கோபமென
ஒருங்கிணைந்த அமைப்பே குடும்பம்
உறவுகள் அனைவரும் கூடியிருக்கும் கோவில்
அழகிய தடாகமாய் பூத்துக் குலுங்கி
ஆர்ப்பரிக்குமே என்றும் ஆனந்தக் குடும்பம் !

உயிர்ப்போடு நாம் இயங்க
உணர்வோடு செயற்பட
வாழ்வின் அர்த்தங்களைப் புரிந்திட
தேடல்களைத் தேடிட
படையல்களைப் படைத்திட
சாதனைகளைச் சரித்திரமாக்க
உந்து சக்தியாய் இருப்பது
குடும்ப அமைப்பே !

ஆறுதலையும் தேறுதலையும் தந்து
தட்டிக் கொடுப்புக்களை கொடுத்து
தடுமாறிப் போகாமல்
வாழ்வில் தடம் புரளாமல்
தன்னம்பிக்கையோடு வாழ
எதிர் நீச்சலடிக்க
எப்போதும் கைகொடுப்பது
குடும்பத்தின் உறவுகளே !

குடும்ப ஒற்றுமையை பேணிடுவோம்
குதூகலமாய் கூடி வாழ்ந்திடுவோம் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 15,05,2019

பகிரவும்...