Main Menu

“காரை சுந்தரம்பிள்ளை ஆசான்” (நினைவுக் கவி)

ஊரைப் பெருமைப் படுத்த
காரையென்ற பெயர் தாங்கி
தாரை தாரையாக படைப்புக்களைத் தந்த
காரை சுந்தரம்பிள்ளை ஆசானை
என் இந்துநாகரீக ஆசானை
ஈழத்து தமிழிலக்கிய வரலாற்றில்
தனக்கெனத் தனிமுத்திரை பதித்த அறிஞனை
பன்முகப்பட்ட திறமை கொண்ட ஆசானை
நினைவில் நிறுத்திடுவோம் !

கனிவான பேச்சும் கரிசனையும் கொண்ட
கண்டிப்பற்ற எம் ஆசான்
கலகலப்போடு பாடம் நடாத்தி
மாணவர் குழாமை
தன் வசமாக்கிய ஆசான்
காரை சுந்தரம்பிள்ளை ஆசான் !

அதிபராக ஆசானாக
ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராக
பல்கலைக்கழக விரிவுரையாளராக
கவியரங்க தலைமை வித்துவானாக
நாடக அரங்கியல் பேராசானாக
நிர்வாக அதிகாரியாகவென
பன்முகப்பட்ட பணிகளோடு வலம் வந்தாரே !

கவிதைகள் கட்டுரைகள் சிறுகதைகள்
நாடகங்கள் நாவல்கள் நாட்டுக்கூத்துக்களென
இவரின் படைப்புக்களோ ஏராளம்
படைப்புக்கள் மட்டுமன்றி
மாநகரசபை, தாதியர் பயிற்சிக் கல்லூரி
தேசீய கீதங்களையும ஆக்கிய பெருமையும்
காரை ஆசானையே சாரும் !

ஆய்வுகள் பல செய்து
ஆழுமைகள் பல பெற்று
தமிழோடு வாழ்ந்து
தமிழோடு மறைந்த
காரை ஆசான்
இன்று எம்மோடு இல்லை
ஆனாலும் அவர்தம் படைப்புக்களில்
என்றென்றும் வாழ்வார் !

கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A) 04.06.2020

பகிரவும்...