Main Menu

சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் 37 மாணவர்கள் மீது கத்திக்குத்து!

சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் சுமார் 37 மாணவர்கள் மற்றும் இரண்டு பெரியவர்கள் காயமடைந்துள்ளதாக சீனாவின் மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று (வியாழக்கிழமை) காலை 8:30 மணியளவில் குவாங்சி தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சுஸோ நகரில் உள்ள ஒரு பாடசாலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் பொதுவாக வகுப்பிற்கு வரும் நேரத்தில் இந்த தாக்குதல் நடந்ததாக, உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உள்ளூர் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’37 மாணவர்கள் லேசான காயங்களுக்கு ஆளானார்கள், இரண்டு பெரியவர்கள் அதிக காயங்களுக்கு ஆளானார்கள். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர், அவர்களுடைய உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை மேற்கொண்டவர் என சந்தேகிக்கப்படும் நபர், பாடசாலையில் பாதுகாவலராக பணிபுரியும் 50 வயது நபர் என பொலிஸார் அடையாளங் கண்டுள்ளனர். இவரை தற்போது பொலிஸார் காவலில் எடுத்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பாடசாலையின் முதல்வரும் மற்றொரு பாதுகாப்பு காவலரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கான காரணம் எதுவென தெரியாத நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகிரவும்...