Main Menu

“கவிதை எனும் மந்திரம்” (சர்வதேச கவிதை தினத்திற்கான சிறப்புக்கவி)

கவிதை என்ற மந்திரம்
கவர்ந்து இழுத்த தந்திரம்
எனைக் கட்டிப் போட்டஇயந்திரம்
உள்ளத்தின் உணர்வாகி
உணர்வுகளின் தெறிப்பாகி
உவமையின் வனப்பாகி
காலத்தின் தேவையாகி
கவிதையாய் பொங்கிடுமே !

இலக்கியத்தின் அழகியல் வடிவம்
இரசனையின் இலயிப்பு
கலை இன்பத்தின் குதூகலம்
கலையின் அரசி கவிதை
கவிஞனின் ஆழ்மன உணர்வு
சிந்தனைத் தெறிப்பு
உணர்வுகளின் பெருக்கம்
அத்தனையும் ஒன்றாக இணைய
அழகாகப் பிறப்பது அழகிய கவிதை !

சொல்லடுக்குகளால் கட்டப்பட்ட மாளிகை
சந்தங்கள் கெந்தி விளையாடும் மேடை
ஓசைகள் நடமாடும் ஒய்யாரக்கூடம் கவிதை
உவமை உருவக அணிகளின் மாடம்
உணர்வுகள் கொப்பளிக்கும் கடல்
உள்ளத்தின் தெளிந்த வெளிப்பாடு
ஒட்டுமொத்த தோரணையில் இதுவே கவிதை !

வாழ்க்கையின் இரசனைகளை
வாழ்வியல் உண்மைகளை
காலத்தின் நிகழ்வுகளை
கச்சிதமாய் உருக்கொடுத்து
உருவிற்கு கருக்கொடுத்து
கவிதை எனும் மந்திரம் மனதோடு மலர
கைவிரல்களால் பதிக்கும் ஓவியம்
கவிதை எனும் அழகியல் காவியம் !

கவி என்ற தேர்
புவி மீது அழகோடு
கச்சிதமாய் உலா வந்து
தமிழுக்கு வளம் சேர்க்கிறதே !

பகிரவும்...