விழுமியங்கள் வீணாகிடுமா ?
மானிட வர்க்கத்தின் மதிப்பு மிக்க
மாபெரும் சொத்துக்கள் விழுமியங்களே
மனித வாழ்க்கையை
செம்மைப் படுத்தும் உளியாகி
நல்வழி காட்டுவது விழுமியங்களே
விழுமியங்களைப் பேணிக் காத்து
அடுத்த தலைமுறைக்கும் கொடுத்தால்
வீணாகாது பாதுகாக்கலாம் !
இலக்கியங்கள் வாயிலாக
அறநெறிகள் நீதிகள் ஆசாரங்களெல்லாம்
கதைகளாய் பழமொழிகளாய்
விழுமியங்களாகி மக்களை சேர்கிறது
மக்கள் வாழ்ந்து அறிந்துணர்ந்து
அடுத்த தலைமுறைக்கும் கொடுத்தால்
விழுமியங்கள் விஸ்தீரணமாகும் !
கற்பு என்ற விழுமியத்தை
கச்சிதமாய் உணர்த்தியது சிலப்பதிகாரம்
வாழ்க்கையின் நெறிமுறைகளை
ஈரடியால் உரைத்தது திருக்குறள்
குடும்ப வாழ்வியலின் விழுமியத்தினை
மொத்தமாய் சித்தரித்தது இராமாயணம் !
ஒன்றே குலம் ஒருவனே தேவனென்ற
மனிதநேயப் பண்பும்
ஒருவனுக்கு ஒருத்தியென்ற
வாழ்வியல் நெறியும்
உயர்ந்த விழுமியங்களாகி
உன்னதம் பெற்றதுவே அன்று !
ஆனால் இன்றைய வாழ்வு
மதம் பிடித்த மதவாதிகளால்
சின்னா பின்னமாகி சீரழிந்து
வழிபாட்டுத் தலங்கள் கூட
பாதுகாப்பற்ற இடங்களாகி
மனித உயிர்களைக் குடிக்கும்
மனித வெடி குண்டுகளாகி
அப்பாவி உயிர்களைப் பலி எடுக்கிறதே !
மதம் என்ற போர்வையில்
மதம் பிடித்து அலைகிறான் மனிதன்
மதம் கூறும் நல்லிணக்கம் சமாதானம்
ஒழுக்கம் என்ற விழுமியங்கள்
மதவாதிகளால் தகர்க்கப்பட்டு
மனிதநேயம் தொலைந்து
மரணங்களும் மலிந்து
விழுமியங்களும் வீணாகிடுதே !
கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A) 25,04,2019