வரமெனப் பெற்றதாய்
எம் வாழ்வின் வரமாக
பிரம்மனின் அற்புதப் படைப்பாக
பிறவிப் பெரும் பயனாக
தன்னலமே இல்லாத ஜீவனாக
தனித்துவம் மிக்க உறவாக
தாயென்ற கண்கண்ட தெய்வம்
தவமின்றிக் கிடைத்ததே எமக்கு வரமாக !
உயிர் அணுவைத் தந்து
உதரத்தில் எமை சுமந்து
உதைகளையும் வலிகளையும் தாங்கி
உதிரத்தை பாலாக்கி தந்து
உலகப் பரப்பிலே அடையாளம் காட்டிய
உன்னத ஜீவன் வரமெனப் பெற்றதாயே !
உருகும் மெழுகாய் எமக்காய் உருகி
உணர்வின் பிழம்பாய் உயிரையே தந்து
வரம் தந்த சாமியாய்
கரம் கோர்த்து நடந்த தாய்
எமக்கான வரமாக
எதிர்பார்ப்பு ஏதுமின்றி
தன்னுயிர் எனவே
தரணியில் எமை ஆளாக்கிய தாய் !
எதற்குமே ஈடுஇணை இல்லாத உறவு
எமக்காகவே எல்லாவற்றையும்
அர்ப்பணித்த உள்ளம்
தியாகத்தின் மறுபிறவி
வரமெனப் பெற்ற எம் தாயே !
அன்பாய் பண்பாய் எம் அறுவரையும் காத்து
ஆற்றலை ஆழுமையை எமக்குள் விதைத்து
ஆக்கமும் ஊக்கமும் அனுதினமும் தந்து
அரச பணிகளிலும் அனைவரையும் அமர்த்தி
அன்னையாய் தந்தையாய் ஆசானாய்
அனைத்தையும் வரமெனப் பெற்ற தாயே
வருந்துகின்றோம் இன்று நீ இல்லையென்று !
தாயாகி உணர்கிறேன்
உன் தாயன்பை மதிக்கிறேன்
உளமார நேசித்தேன்
உண்மையாய் பூசித்தேன்
காலனுக்கும் பொறுக்கவில்லை
கடுகதியில் கூட்டிச் சென்றானே
வரமெனப் பெற்ற என் தாயை
தாயே உன் நினைவோடு வாழ்வேன் என்றும் !
கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 09.05.2019