“ மீண்டொருமுறை “ ( விடை பெறும் ஆண்டுக்கான சிறப்புக்கவி )
உலகையே உலுக்கி
உளமதை வருத்தி
வாழ்வினை முடக்கி
வலியதைத் தந்த
இருபது இருபது
இன்றோடு விடை பெறுகுதே
மீண்டொருமுறை வேண்டாமே
எந்த அனர்த்தமும் வேண்டாமே !
உலகளவில் மில்லியனையும் தாண்டி
உயிர்களைக் காவு கொண்ட
இருபது இருபது இரணமாகி
தந்ததே வலியினை
இன்றோடு விடை பெறுகுதே
மீண்டொருமுறை வேண்டாமே இது !
இருபது இருபதில்
எத்தனை பிரபலங்களை இழந்தோம்
உறவுகளைக் காவு கொடுத்தோம்
ஏக்கமும் தாக்கமும் மனதை வாட்ட
கண்ணுக்கு தெரியாத கிருமியொன்று
மூன்றாம் அலையாக தொடர
முடக்கத்திலும் முடக்கமிது !
சோதனைகள் வேதனைகள்
வேலையில்லாத் திண்டாட்டம்
வைரஸின் தாக்கம் வீட்டுச்சிறை
பொருளாதார மந்தம்
இயற்கை சீற்றங்களென
சோதனையாய் கடந்ததே
இருபது இருபது
மீண்டொருமுறை வேண்டாமே
இது வேண்டாமே !
பிறக்கும் புத்தாண்டு
பீடைகளை ஒழித்து
சோடையைப் போக்கி
வாட்டத்தை நீக்கி
சந்தோசங்களை அள்ளித் தரட்டும்
எதிர்பார்ப்போடு நாமும் !
கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 31.12.2020