Main Menu

“ வீரத்தமிழன் வீரமாமுனிவர் “ (நினைவுக்கவி)

இத்தாலி நாட்டுப்பிள்ளை
இயற்பெயரோ பெஸ்க்கி
இறை பணியின் நிமித்தம்
இந்தியத் தாய்க்கு தத்துப் பிள்ளையாகி
தமிழ் தாய்க்கு செல்லப் பிள்ளையாகி
தமிழனாக வீரமாமுனிவரென மாறி
தமிழனாகவே வாழ்ந்து
தமிழகத்தில் மடிந்தாரே மாசித்திங்கள் 4இலே !

வீரத்தமிழன் வீரமாமுனிவன்
தீராப்பற்றுக் கொண்டார் தமிழில்
இலக்கண இலக்கியங்களைத் கற்றுத்தேறி
இருபத்திமூன்று நூல்களைத் தமிழில் எழுதி
பத்திற்கு மேற்பட்ட மொழிகளில் தேறி
உயிர்மொழியாக தமிழைப் பேணினாரே !

ஐரோப்பிய நாட்டில் பிறந்த துறவி
தமிழ் உரைநடையின் தந்தை
தமிழ்நாட்டில் தமிழுக்காக
ஆக்கித் தந்தார் அரிய பொக்கிஷங்களை
தேம்பாவணி எனும் காவியத்தை ஆக்கி
தேமதுரத் தமிழுக்கு சூட்டினார் மகுடம் !

தமிழுக்கு முதன் முதலாக
சதுர அகராதி படைத்து
அறிய வைத்தார் தமிழின் ஆழத்தை
திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்து
தமிழின் பெருமையை உணர்த்தினார் உலகிற்கு
தமிழ் அச்சுக்கலையின் வழிகாட்டி
தொன்னூல் இலக்கண நூலை
தமிழுக்கு தோற்றுவித்த ஆசான் !

வீரத்தமிழன் வீரமாமுனிவன்
தலையில் அணிவார் என்றும் தலைப்பாகை
தமிழன்னைக்கு சூடினார் வாகை
தமிழரெல்லாம் கொண்டனர் உவகை
தமிழும் கொண்டது இவரால் பெருமை
தமிழ்நாட்டில் 37 ஆண்டுகள் வாழ்ந்து
மாசித் திங்கள் நான்கினிலே
வீரத்தமிழனாய் இயற்கை எய்தினாரே !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 04.02.2021

பகிரவும்...