Main Menu

” வரமாகும் வழி காட்டிகள் “

ஆசிரியப் பணியோ புனிதப்பணி
அதற்கு நிகரில்லை எப்பணியும்
அக இருளைப் போக்கி
அறிவுக் கண்ணைத் திறந்து
அகிலத்தில் எமை அடையாளம் காட்டிய
ஆசான்கள் எம் வாழ்வின் வழிகாட்டிகளே !

அறிவான சமுதாயம் உருவாக
அர்ப்பணிப்போடு செயற்பட்டு
கல்வியின் அடிப்படையை
ஆழமாய் மனதில் விதைத்து
பண்படுத்தி கல்விப்பயிர் வளர்த்தவர்கள்
வழிகாட்டிகளான எம் ஆசான்களே !

எம் வாழ்வின் வரமாக
வலுவான சிந்தனைகளை
வரப்பிரசாதமாய் எமக்களித்து
நற் பிரஜைகளாய் நாம் வாழ
நல்லொழுக்கம் கற்றுத் தந்து
நல்வழி காட்டியவர்கள் ஆசான்களே !

ஆண்டுகள் பலவாய் எம்மோடு பயணித்து
நம்பிக்கை விதையை மனதில் விதைத்து
விடாமுயற்சியை பயிற்சியாக்கி
வழிகாட்டிகளாய் நின்று
எம் வாழ்வில் ஒளியேற்றினீர்களே !

அறிவுரைகளும் ஆலோசனைகளும்
ஆழுமையை முழுமையாக்கியது
கண்டிப்பும் தண்டனைகளும்
கல்விக் கடலைத் தாண்ட வைத்து
கலாசாலைக்கும் வழி காட்டியதே !

வாழ்வின் வரமாக
கலங்கரை விளக்காக
கல்வி ஒளி தந்து
கனவுகளை இலட்சியமாக்கி
வழிகாட்டிகளான என் ஆசான்கள்
வாழ்வில் எனக்கு கிடைத்த வரமே !

உங்கள் வழியில்
உங்கள் ஆசியோடும்
புனிதப் பணியோடும்
புலத்து வாழ்வினில்
பல்லின சிறுவரோடும்
ஜேர்மனிய ஆசிரிய குழாமோடும்
தொடர்கின்றேன் பணியோடு நானும் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 17.10.2019

பகிரவும்...