Main Menu

“மே 18”

மேதினியே உறைந்து சிவந்து நின்ற
மே பதினெட்டு இன்று
ஆண்டுகள் பதினொன்று
தாண்டிய போதும்
மாண்ட உறவுகளின் நினைவுகள்
மனதோடு நிழலாட
முள்ளி வாய்க்கால் மண்
நினைவாலயமாய் இன்றும் !

முள்ளி வாய்க்கால் முற்றத்தை
முழுவதுமாய் ஏப்பம் விட்டு
செங்குருதியால் வரையப்பட்ட ஓவியமாய்
எம் தமிழர் வரலாற்றுக் காவிய பூமி
ஆறாத இரணமாய் இன்றும் !

முள்ளி வாய்க்கால் முற்றம்
முடிந்து போன துயரமாய்
உறவுகளின் முனகலையும்
உள்ளக் குமுறல்களையும்
சுமந்தபடி தவிக்குது
தடயங்கள் எச்சங்கள் ஏதுமின்றி
சாம்பல் மேடாகிக் கிடக்குதே இன்றும் !

கொட்டிய நச்சுக் குண்டுகளால்
விலை மதிப்பில்லா உயிர்களும்
குஞ்சுகளும் பிஞ்சுகளும் உறவுகளுமாய்
குலை குலையாக மடிந்தனர் வெந்து
குருதியாறும் பாய்ந்தது குற்றுயிர்களும் துடித்தன
நந்திக் கடலும் சிவந்தது நாதியற்றனர் உறவுகள் !

சர்வதேசம் மெளனித்திருக்க
சர்வ நாசமும் அரங்கேறியதே
வரலாறும் வளங்களும் வாழ்வியல் தடங்களும்
தொன்மைக் குடிகளும் தடயமின்றிப் போனதே
நெய்தல் தேசமும் நொந்து போனதே !

கொன்று குவிக்கப்பட்டோர் கணக்கில்லை
காணாமல் ஆக்கப்பட்டோர்
இன்று வரை விடை எதுவுமில்லை
சிறைக்குள் அடைக்கப்பட்டோர்
விசாரணையுமில்லை விடுதலையுமில்லை !

ஆவணங்கள் காட்சிப் பதிவுகள்
சாட்சிக்கு கொடுத்த போதும்
இன்று வரை தீர்வும் இல்லை
நீதியும் கிடைக்கவில்லை
மேதினியே சாட்சி சொல்லு
போதுமினி அவலங்கள்
நீதியை நிலை நாட்டி விடு !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...