Main Menu

“மெல்லிசை மன்னர்” (பிறந்தநாள் கவி)

பாலக்காட்டில் ஆனித்திங்கள்24 இல் உதித்து
தாளக்கட்டு எமைக் கட்டிப்போட
ஆர்மோனியப் பெட்டியால்
மெட்டுப் போட்டு
எம் ஹார்மோன்களை எல்லாம்
எழிற்சி பெற வைத்த
இசையுலகின் முடிசூடா மன்னனே
ஏழிசையின் இமயமே !

உலக இசையைத் தமிழில் புகுத்தி
தமிழிசைக்கு புகழும் சேர்த்து
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு
மெட்டும் போட்டு
பெருமை சேர்த்தாரே !

பல்துறைக் கலைஞனாய்
பாடகனாய் நடிகனாய்
வலம் வந்து
தலைமுறைகள் மூன்றை
இசை வாழ்விலும் கண்ட
இசையுலகின் சக்கரவர்த்தியே !

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடேயென
இந்த வரிகளுக்கு உயிர் கொடுத்து
உலகப் பந்தில் எமக்கு வலுச் சேர்த்து
எம் வலியை இசையால் உணர்த்தினீரே !

இசைக் காட்டாற்று நதிகளில்
நீவீர் தான் மூலநதி
ஏழு ஸ்வரங்களையும்
இசைத்த இசைச் சிற்பியே
இசையோடு உலா வருமே
என்றும் உம் இனிய நாதம் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன். (B.A). 24,,06,2020

பகிரவும்...