Main Menu

முத்தமிழ் வித்தகர் (விபுலானந்த அடிகளாரின் நினைவுக்கவி)

மீன்பாடும் தேன்நாடாம்
மட்டுநகர் காரைதீவில்
எட்டுத் திக்கும் புகழ்பரப்ப
வந்துதித்தார் மயில்வாகனனார்
அன்பு அறிவு ஆனந்தம் அடக்கம்
இதன் மறுவடிவமுமானார் !

தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும்
தன்னிகரில்லா சேவையாற்றிய மனிததெய்வம்
அவர்தம் வாழ்வே மானிட வாழ்விற்கு
அழியா வரைவிலக்கணம்
ஈழம் தந்த ஜோதி யாழ்நூலின் தந்தை
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் !

தமிழோடு வடமொழியும்
ஆங்கிலமும் சேர்ந்து கற்று
ஆசானாய் அதிபராய்
பேராசிரியராய் நூலாசிரியராய்
அரும்பெரும் சேவைகளை
அவனியிலே ஆற்றினாரே !

தமிழ்நாட்டின் முதல் தமிழ் பேராசானாய்
இலங்கையின் முதல் தமிழ் பேராசனாய்
தமிழோடு வாழ்ந்து சேவையும் செய்தாலும்
துறவை நாடியதே அவர்மனம்
ஓடினார் இராமகிருஸ்ண மடம்நோக்கி
தொண்டுகள் பலஆற்றி
விபுலானந்த அடிகளானாரே !

தமிழ்ப் பாடசாலைகள் பலவும் அமைத்து
ஆச்சிரமங்களை நிறுவி
அறிவியல் கல்விக்கும் வித்திட்டு
யாழ் நூலையும் தந்தார்
அடிகளாரின் கற்பனையாற்றலும் கவிச்சிறப்பும்
தமிழ்ப்பற்றும் எண்ணிலடங்கா !

அடிகளார் வாழ்ந்ததோ குறுகியகாலம்
ஆற்றியதோ அளப்பெரிய பணிகள்
சாதித்த சாதனைகளோ ஏராளம்
அகவை நாற்பத்தி ஐந்தில்
முதுமையைக் காணாமலே
அழைத்தானே காலனும் விரைவாக
ஆடித் திங்கள் பத்தொன்பதிலே !

கவியாக்கம் – ரஜனி அன்ரன் (B.A) 19.07.2019)

பகிரவும்...