Main Menu

அரசாங்கம் கண்டும் காணாமலும் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்?

வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழரின் அடையாளங்களை அழித்து பௌத்த மயமாக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் அடாவடித்தனங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையிலும் அரசாங்கம் அதனைக் கண்டும் காணாமலும் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என வடக்கு மாகாண முன்னாள் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். 

இது ஒரு சிங்கள பௌத்த மேலாதிக்க நோய் என்று குறிப்பிட்டுள்ள சிவஞானம், எங்கள் மத உணர்வுகளில் தலையீடு செய்கின்ற இந்த நோய் குணப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாமல் இந்த நோய் இன்னும் முற்றுகிற பொழுது சர்வதேச தலையீடு வருவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறதென்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

யாழ். கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (19) நடாத்திய ஊடக சந்திப்பின் இந்து ஆலயங்கள் மீதான ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த சில நாட்களாக சிங்கள பௌத்த மேலாதிக்ககத்தின் அடாவடித்தன செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. அது வன்முறையாகவும் காணப்படுகிறது. குறிப்பாக கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலய விடயத்தில் அங்கே குழுமியிருந்து அமைதியாக சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற அல்லது வழிபாட்டில் ஈடுபட்ட மக்களையும் குறிப்பாக தென்கையில் ஆதின முதல்வருக்கு வெந்நீர் ஊற்றியதும் அதுவும் எச்சில் படுத்தப்பட்ட தேனீர் ஊற்றியதும் மிக மிக மோசமான செயற்பாடுகள் ஆகும். 

அதேபோல செம்மலை பிள்ளையார் கோவில் விடயத்திலும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் அடாவடித்தனத்தில் ஈடுபடுகின்றது. 

இவ்வாறு இவை எல்லாம் வடக்கு கிழக்கில் இருந்த இப்போது மலையகத்திற்குத் தாவியிருக்கின்றது. இந்த நோய் பரவலாக இந்த நாட்டிலே தற்போது மேலோங்கத் தொடங்கியிருக்கின்றது. இது ஒரு போதும் ஆரோக்கியமான விடயமல்ல. 

இப்படியான நிகழ்வுகள் தொடர்பில் வெளிப்படையாகச் சொன்னால் முன்னைய ஆட்சிக் காலங்களில் கூட இது போன்று நடைபெறவில்லை. ஆனால் நல்லாட்சி என்று நாங்கள் உதவிய இந்த அரசாங்க காலத்தில் படுமோசமான முறையில் இச் செயற்பாடுகள் நடைபெறுகிறது. ஆனால் இந்த அரசாங்கமும் அதைக் கண்டும் காணாமலும் இருக்கிறது. 

அதேநேரத்தில் இரண்டு வருடத்தில் அல்லது மூன்று வருடத்தில் தீர்வு தருவோம் என்று இந்த அரசாங்க பிரதம அமைச்சர் சொல்கின்றார். இப்படியாக இதைக் கூடச் செய்ய முடியாமல் கை கட்டி வேடிக்கை பார்ப்பவர்களால் தீர்வு எப்படிச் சாத்தியம். ஆகவே எங்கள் மத உணர்வுகளில் தொடர்ச்சியாக தலையீடு செய்கிறதை கை கட்டி வெடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமல்ல. 

இவ்வாறான செயற்பாடுகள் தொடருகின்ற போது அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் நிலைமை பின்னரும் தொடரும் என்று நினைக்கலாம். அவ்வாறு தொடர்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதை தனிப்பட்ட முறையில் சொல்லி வைக்க விரும்புகிறேன். ஏனெனில் அரசியல் ரீதியாக எங்களுக்கான அடிப்படையைக் கூட அரசாங்கம் செய்யவில்லை என்பதையும் தமிழ் மக்கள் சிந்தனையாக இருக்கிறது. 

ஆகவே, சர்வதேச ரீதியாக இந்த விடயங்கள் சர்வதேசத்தினால் கண்காணிக்கப்படும் என்பதையும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகள் புரிந்த கொள்ள வேண்டும். இது வெறுமனே தமிழ் மக்களோடு அல்லது இந்துக்களோடு முடிந்துவிடக் கூடிய விடயமல்ல என்பதையும் வேறு பலர், வேறு நாடுகள் பார்த்த்துக் கொண்டிருக்கின்றனர். 

ஆக இந்த விவகாரம் இன்னும் இன்னும் முற்றுகிற பொழுது சர்வதேசம் தலையீட வர வாய்ப்புக்கள் இருக்கிறது என்று நான் நினைக்கின்றேன் என்றார். 

பகிரவும்...