Main Menu

“ மனதோடு நிழலாடும் என் ஊர் “

வேல் வந்து அணைந்ததனால்
வேலணை எனப்பெயராகி
வித்துவான்களையும் அறிஞர்களையும்
பண்டிதர்களையும் புலவர்களையும்
நிறைவாகக் கொண்ட என்னூரின்
நினைவழியா ஞாபகங்கள்
நிழலாடுதே என் மனசோடு !

வந்தாரை வரவேற்கும்
வானுயர்ந்த பனைமரங்கள்
வரவேற்று கையசைக்கும்
வாளிப்பான வாழைமரங்கள்
பச்சைக் கம்பளம் போர்த்திய
பசுமை நிறைந்த நெல்வயல்கள்
தோட்டங்கள் தோப்புக்கள் துரவுகளென
காட்சி தருமே என்னூரும் !

காலையிலே பூபாள இராகமாய்
கொண்டைச் சேவல் கொக்கரிக்க
கோவில் மணி ஒலித்திட
பட்சிகள் பண்ணோடு பாட்டிசைக்க
பாட்டாளி மக்களும் கண்விழித்து
கூட்டாகத் தொழிலுக்கு
கிளம்பிடுவார் குதூகலமாய்
பட்டாம் பூச்சியென சிறார்களும்
பள்ளிக்கு சென்றிடுவார்
கலகலவென விழித்திருக்குமே என்னூரும் !

ஊரின் மத்தியிலே நடுநாயகமென
நான் படித்த பள்ளி
மத்திய மகா வித்தியாலயமும்
எம் மதமும் சம்மதமெனக் காட்டும்
இந்து முஸ்லிம் கிறிஸ்தவ ஆலயமும்
என்னூரின் ஒற்றுமையை பறை சாற்றிடுமே !

காலாற நாம் நடந்தால்
கடலலைகள் தாலாட்டும்
கால்தடம் மணலில் பதியும்
தென்றல் காற்றும் வருடும்
தென்னங் கீற்றும் அசையும்
தெம்மாங்குப் பாட்டும் கேட்கும்
தெருவே கலகலக்கும்
தேமதுரத் தமிழும் மணக்குமே என்னூரில் !

புலம் பெயர்ந்து வந்தாலும்
என்னூரின் மண்வாசம்
எந்நாளும் என்னோடு உறவாடும்
மனசோடு கதை பேசும்
நிழலாக எனைத் தொடரும்
நினைவழியா ஞாபகம் என்னூரே !

கவியாக்கம்……….ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...