Main Menu

காணாமல் போனோர், அரசியல் கைதிகள் பிரச்சினைகளுக்கு 2 வருடங்களுக்குள் தீர்வு : நாமல்

ஜூலைக் கலவரம் முதல் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உங்களுக்கு உள்ளது என்பது எமக்கு தெரியும். காணாமல் போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, நிலப்பிரச்சினை, காணி உரிமைப் பிரச்சினை என முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அதை நாங்கள் நன்றாக புரிந்துள்ளோம். அடுத்து வரும் 2 வருடங்களில் உங்களது இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தர முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரித்து வவுனியாவில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரபா கணேசன் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,  

வன்னி வாழ் மக்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்கள். நீங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். யுத்தம் முடிவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் வன்னி மண்ணை அபிவிருத்தி செய்தார். பாடசாலைகள், வீதிகள், வைத்தியசாலைகள் என பாரிய அபிவிருத்திகளை செய்தார். வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளில் தொழிற்பேட்டைகளை உருவாக்கினோம். 

முல்லைத்தீவை சுற்றுலா மையமாக மாற்றினோம். விவசாயிகளுக்கான சலுகைகளை வழங்கினோம். மீனவர்களின் கடற்தொழிலுக்கான உதவிகளை வழங்கினோம். ஆனால் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவை அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்து விட்டது. வன்னி வாழ் மக்களின் அபிவிருத்திகள் முற்றாக தடைப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் இதற்கு முழுமையான பொறுப்பு கூற வேண்டும். மன்னாரில் மஹிந்த காலத்தில் உருவாக்கப்பட்ட தொழிற்ப்பேட்டை தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்ட இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் முழு நாடும் சிதைவடைந்துள்ளது. 

தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடு இன்றி அபிவிருத்தியை மேற்கொண்டோம். பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை வரை அவரது அபிவிருத்தி திட்டம் இருந்தது. இன்று உங்களது விவசாயம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இளைஞர், யுவதிகளுக்கு வேலையில்லா பிரச்சினையுள்ளது. உங்களது பிள்ளையின் கல்வியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வன்னி வாழ் மக்களின் கல்வி தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷ அக்கறை செலுத்தியுள்ளார்.

எமது ஆட்சி வந்ததும் சகல பிரதேச செயலங்களுக்கும் உட்பட்ட வகையில் அனைத்து வசதிகளும் கொண்ட தேசிய பாடசாலைகளை உருவாக்குவோம். 2025 ஆம் ஆண்டாகும் போது ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இளைஞர், யுவதிகள் வெளிநாடுகளுக்கு சென்று வேலைவாய்ப்பைக் பெற்றுக் கொள்ளக் கூடிய கல்வித் திட்டத்தை உருவாக்க வேண்டும். அமைச்சர் றிசாட் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் செல்வதை நிறுத்துங்கள். 

உங்களது சிறந்த எதிர்காலத்திற்கான பொருளாதார திட்டத்தை உருவாக்குவோம். வன்னியில் உங்களுக்கு என ஒரு தமிழ் தலைமைத்துவத்தை உருவாக்குவோம். இந்த அரசாங்கத்தில் பல முக்கியமான தீர்மானங்களை றிசாட் பதியுதீன் மேற்கொள்கின்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் பணத்திற்கு அடிமைப்பட்டுள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றோல் நிரப்பு நிலையம், மதுபானசாலை என்பவற்றுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் வன்னி மக்கள் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. அவர்களுக்கு தேவையாக இருப்பது தங்களின் பெருளாதாரமே. அவர்கள் தங்களது சலுகைகளை மட்டுமே கதைப்பார்கள்.

சம்மந்தனுக்கு வீடு தேவை என்றால் ஒரு கடிதத்தை வழங்குவார். அரசாங்கத்தினால் வீடு வழங்கப்படும். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு வாழ் மக்களுக்கு வீடு தேவை என்று கேட்பதில்லை. அரசாங்க அமைச்சர்கள் ஹெலிகொப்டரில் வந்து அடிக்கல் நாட்டிவிட்டு செல்வார்கள். அதற்கு பின் அந்த கட்டிடங்கள் கட்டப்படுவதில்லை. யாழ்ப்பாணத்தில் ஒரு விமான நிலையத்தை திறந்தார்கள். அது வயல்நிலமாக இருக்கிறது. குறைந்தபட்சம் அதையாவது சரியாக செய்ய முடியவில்லை. 

நீங்கள் இனியும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பீர்களாக இருந்தால் றிசாட் ஊடகாவோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடாகவோ எந்தவித அபிவிருத்தியும் உங்களுக்கு வரமாட்டாது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி மொட்டு சின்னத்திற்கு வாக்களியுங்கள். நீங்கள் அனைவரும் தாமரை மொட்டு சின்னத்துடன் இணைந்து கொள்ளுங்கள். 1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரம் முதல் 2009 வரை தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் உங்களுக்கு உள்ளது என்பது எமக்கு தெரியும்.

 காணாமல் போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, நிலப்பிரச்சினை, காணி உரிமைப் பிரச்சினை என முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அதை நாங்கள் நன்றாக புரிந்துள்ளோம். நாங்கள் சம்மந்தனைப் போல் ஒவ்வொரு தீபாவளிக்கும் தீர்வு கிடைக்கும் என பொய் சொல்ல மாட்டோம். நாங்கள் செய்ய முடியும் என்றால் செய்ய முடியும் என்போம். செய்ய முடியா விட்டால் முடியாது என்போம். 

இதனை நாங்கள் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றோம். அடுத்து வரும் 2 வருடங்களில் உங்களது இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்று தர முடியும். இதனை புரிந்து எமது கரத்தை பலப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.  

பகிரவும்...