Main Menu

“ பூவினத்துப் புயல்களே “

பூவினத்துப் பூவையரே
பூந்தளிர் மங்கையரே
புதிய சரித்திரம் எழுதிட
புதுமைப் பெண்களாகி
தாய்நிலத்து வேர் காக்க
போர்க்களத்து எல்லையிலே
புயலாகி நின்றீரே
புரட்சி தனை செய்தீரே !

பூவினத்துப் புயல்களே
புன்னை வனக் குயில்களே
இருப்புக்களைக் காக்கவே
இறைமைகளைப் பேணவே
எல்லைகளைக் காத்து நின்றீர்
எரிமலையாய் பொங்கி நின்றீர்
புரட்சிப் பெண்களாய்
புது நானூறும் படைத்து நின்றீர் !

மண்ணுலகின் மங்கையரே
மாண்பு மிக்க நங்கையரே
கண்ணே கட்டிக் கரும்பேயென்று
மருட்டி மாயம்தான் செய்திடுவார்
மறந்து தானும் மயங்கிடாதீர்
மகத்துவத்தை இழந்திடாதீர் !

பூவை என்றும் பேதை என்றும்
பவ்வியமாய் சொல்லியே
பலிக்கடா ஆக்கிடுவார்
பழியையும் சுமத்திடுவார்
குழிக்குள்ளும் தள்ளிடுவார்
பூவையே உனைப் பாதுகாக்க
புயலாகிப் போராடு
உன்னையே ஆயுதமாக்கு !

பூவினத்துப் பூவையே – உன்
பொறுமையை சோதித்தால்
பெண்மையை சீண்டினால்
பொங்கி எழுந்து விடு
பூகம்பமாய் வெடித்து விடு
புயலாகத் தாக்கி விடு !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 14,03,2019

பகிரவும்...