Main Menu

“ நெஞ்சையள்ளும் காவியம் “

கற்பின் பெருமை உணர்த்திய
காலத்தால் அழியாத காப்பியம்
முத்தமிழ்க் காப்பியம்
முதல் எழுந்த காப்பியம்
இசையும், நாடகமும் இணைந்த
இலக்கிய நயம் மிளிரும்
இனிய வரலாற்றுப் பெட்டகம்
இளங்கோ அடிகள் ஆக்கிய காப்பியம் !

சொற்சுவை பொருட்சுவையோடு
வெண்பா, கலிப்பா, அகவற்பாவோடு
மூன்று காண்டங்களையும்
முப்பது காதைகளையும்
மூவேந்தர் நாடுகளையும்
முத்தாக கொண்ட காப்பியம் !

நெஞ்சை அள்ளும் காவியம்
நினைவுகளை மீட்கும் காவியம்
அகத்திணை புறத்திணைகளை
அழகாய் விளக்கிய காப்பியம்
அறம், பொருள், இன்பத்தையும்
அரங்கேற்றிய காப்பியம்
ஐவகை நிலங்களையும்
தன்னுள் அடக்கிய காப்பியம் !

அரசியல் பிழைத்தோர்க்கு
அறமே இயமன் ஆவதையும்
உரைசால் பத்தினியை
உயர்ந்தோர்கள் போற்றுவதையும்
ஊழ்வினை வந்து உறுத்தும் என்பதையும்
உரமாய் விளக்கிய ஒப்பற்ற காவியம்
உன்னதமான குடிமக்கள் காப்பியம் !

இளங்கோ அடிகள் ஆக்கிய
களங்கமில்லாக் காப்பியம்
நெஞ்சை அள்ளும் காவியம்
நினைவுகள் அலைமோதும் காவியம்
நீதியை நிலைநாட்டிய காவியம்
சிலப்பதிகாரம் எனும் சிருங்கார ஓவியம் !

கவியாக்கம் – ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...