Main Menu

“நாவலர் பெருமான் “ ( பிறந்தநாள் நினைவுக்கவி )

நல்லை நகர்ப் பதியினிலே
எல்லையில்லாப் புகழ் நாவலர்
வல்ல தமிழை வளமுறக் காக்கவே
மார்கழித் திங்கள் பதினெட்டிலே
ஞாயிறாய் உதித்தார் நற்றமிழுக்காய் !

தமிழையும் சைவத்தையும்
தழைத்தோங்கச் செய்திடவே
திடமான மனதுடனே
தீவிரமாய் பணியாற்றி
புராண ஆகமங்களை
பல்லுலகும் அறியும் வண்ணம்
தொல்லுலகில் விளங்க வைத்தாரே !

வெள்ளையனின் காலமதில்
தான் கொள்ளை கொண்ட தமிழ்அமுதை
அள்ளி அள்ளி வழங்கினாரே
எள்ளி நகையாடியவர்களும்
தெள்ளுதமிழின் தெம்மாங்கை
பாடினரே பரவினரே !

மறைந்து போக இருந்த சமயத்தை
மறுமலர்ச்சி அடையச் செய்து
அச்சுயந்திரத்தையும் அறிமுகம் செய்து
அரும்பெரும் நூல்களையெல்லாம்
அச்சுருவில் கொண்டு வந்து
இலவசக் கல்வியையும்
இலவச நூல்களையும்
இன்முகத்தோடு மக்களுக்கு வழங்கி
தாய்மொழியைப் புகட்டினாரே !

சமரசம் நிலவிடவே
சைவசமய நூல்கள் பலவும் பதிப்பித்து
தமிழையும் சைவத்தையும்
தன் கண்ணெனக் காத்தாரே
வறுமையைப் போக்க
கஞ்சித்தொட்டி தர்மத்தையும் செய்தாரே
நாவலரின் தனித் தமிழ்ப்பற்றே
இன்று நாம் தமிழராய் வாழவும்
தமிழ் வாழவும் வழி கோலியதே !

கவியாக்கம்- ரஜனி அன்ரன் (B.A) 18.12.2019

பகிரவும்...