Main Menu

நட்பென்றாலே… (சர்வதேச நண்பர்கள் தினத்திற்கான சிறப்புக்கவி 30.07.2020)

நட்பென்பது அழகான பூ
வாழ்வியல் தோட்டத்தில் பூத்திட்ட பூ
வனப்பு மிக்க பூ என்றுமே வாடாத பூ
வாசப் பூ அது நேசப் பூ
வாழ்வியலின் வசந்தப் பூ !

நட்பு என்ற நல்லுறவு
வளர்பிறை போல் வளர்ந்து
வளைந்து நெளிந்து சென்று
வாழ்வினை வண்ணமாக்க
வரமாகக் கிடைத்த உரமான உறவு
அழகான ஒரு உறவு தூயநட்பே !

அன்று பள்ளியில் கல்லூரியில்
கலாசாலையில் என்று மலர்ந்த நட்பு
ஞாபகங்களாய் சிறகடிக்க
இன்று புலத்தில் பணியில் ஊடகத்தில்
என்று தொடர்கிறது என் நட்பு !

எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி
இரத்த பந்தம் ஏதுமின்றி
ஈடு இணைகள் இன்றி
வரையறைகள் ஏதுமின்றி
ஒட்டுமொத்த உறவின் பலத்தை
உன்னதமாய் கொண்ட உறவு நட்பே !

நம்பிக்கையின் சின்னமிது
கள்ளம் கபடமில்லா உறவிது
பேதம் தாண்டிய வேதமிது
பெருமை கொண்ட உறவிது
உற்ற நேரத்தில் உதவுவது
உன்னதமான உற்ற நட்பே !

இதயத்தின் ஆழத்தில் ஊற்றெடுத்து
இறுதிவரை தொடர்ந்து
நிலுவையில் நிற்காது
சிலுவையாய் எமை சுமப்பது
முழுமதியான தூய நட்பே !

இதயம் அழுதால் துடைப்பது நட்பு
இன்னல் நேர்ந்தால் துடிப்பது நட்பு
உணவைப் போல மருந்தைப் போல
உறுதுணையாவது உற்ற நட்பு
உயிரைக் கொடுப்பதும் உண்மைநட்பே
தாய் தந்தை வரம் போல
நட்பென்றாலும் ஒரு வரமே !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...