Main Menu

“தமிழ் வளர்த்த மேலைநாட்டு அறிஞன் “ (ஜி.யூ.போப் நினைவுக்கவி)

மேலை நாடாம் கனடாவில் பிறந்து
இங்கிலாந்தில் கல்வி பயின்று
கிறிஸ்தவ மதத்தில் பற்றாகி
தமிழகத்திற்கு சென்று
தமிழை நன்கு கற்றுத் தேறி
தமிழ்ப்பணி ஆற்றினாரே ஜீ.யூ.போப் !

நாற்பது ஆண்டுகள்
தமிழோடு பயணித்து
தமிழ் மொழியின் பெருமையினையும்
தமிழ் இலக்கியங்களின் சிறப்பையும்
எடுத்துரைத்தார் உலகிற்கே
மேலை நாட்டைச் சேர்ந்த ஜீ.யூ.போப் !

இலக்கியங்களை இலக்கணங்களை
விருப்போடு திறம்படக் கற்றுத் தேறி
திருக்குறள் திருவாசகம் நாலடியாரை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து
தமிழின் பெருமையை நிலைநாட்டி
அகில உலகமும் அறியச் செய்தாரே !

பண்பட்ட மொழி
பண்பாட்டை காக்கும் மொழி
சொற்செல்வம் நிறைந்த மொழி
தென்னிந்திய மொழிக்கெல்லாம்
தாயான மொழி தமிழே என
தன்முனைப்போடு முழங்கி நின்றார் !

பிறப்பால் மேலை நாட்டவராய் இருந்தும்
உள்ளத்தால் தமிழனாய் வாழ்ந்து
தமிழ் தாயின் தவப்புதல்வனாகி
ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தில்
தமிழ்ப் பேராசிரியராய் பணியாற்றி
தமிழுக்கு பெருமை சேர்த்தாரே !

தன் கல்லறையின் மேல்
தான் மொழி பெயர்த்த
திருக்குறளையும் திருவாசகத்தையும் வைத்து
தமிழ் மாணவன் உறங்குகிறான் என
பொறிக்கச் சொல்லி
திங்களாம் மாசி பதினொன்றில்
இவ்வுலகை விட்டு நீங்கினாரே !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 11.02.2021

பகிரவும்...