Main Menu

தந்தையர் தினமதில்……….

தந்தையர் நாடாம் ஜேர்மனியில்
தந்தையர் தினமாம் இன்று
விந்தைகளைக் கற்றுத் தந்த
தந்தையை நினைத்திடுவோம்
தரணியிலே மதித்திடுவோம்
தலைமுறையாய் காத்திடுவோம் !

பத்து மாதமே எமை தாய் சுமக்க
மொத்த மாதமுமாய் எமை
முத்தாக நெஞ்சிலே சுமந்து
முதலெழுத்தாகி முகவரி தந்து
உலகப் பந்திலே அடையாளப்படுத்திய
உத்தம தந்தையை நினைத்திடுவோம் !

தாயின் அன்பிற்கு ஈடாக
தன்னிகரில்லா அன்பையும் அறிவையும்
தனித்துவமாகவே அள்ளித் தந்து
பாசத்தை வெளியில் காட்டாது
பக்குவமாய் நெஞ்சுக்குள் சுமந்து
பாச மழையாலே எமை கட்டிப் போட்ட
பண்பான தந்தையை நினைத்திடுவோம் !

வாழ்க்கை எனும் ஓடத்தில்
வசதியாய் நாம் வாழ
எம் வாழ்க்கை பிரகாசமாய் ஒளிர
ஓய்வின்றிப் பயணித்த படகு
தன்னையே உருக்கி
திரியாகி ஒளி தந்த தியாகி
ஆயுள் முழுவதும் நாம் வாழ
நல்லாசி வழங்கிய எந்தையை
நினைத்திடுவோம் எந்நாளுமே !

நம்பிக்கை விதைகளை மனதில் விதைத்து
தன் கை கோர்த்து நடந்து
தன் தோள் மீது ஏற்றி வைத்து
தான் காணா உலகத்தை
நாம் காண வேண்டுமென
உயரத்தில் வைத்து அழகு பார்த்த
உன்னத தந்தையை நினைத்திடுவோம் !

குடும்ப சுமையை சுகமான சுமையாக்கி
நெஞ்சிலே சுமந்த சுமைதாங்கியை
வாழ்வியல் பாதையில்
நல்வழி காட்டிய ஆசானை
தந்தையர் தினமதில்
தார்மீகமாய் போற்றுவோம்
தரணியில் நினைத்திடுவோம் !

கடின உழைப்பின் வியர்வைத் துளிகளை
துரிதமாக உரமாக்கி
உறுதுணை தந்த
தந்தையின் அன்பு ஆழமானது
அர்த்தம் செறிந்தது
ஆழ்மனதிற்குள்ளும் உறைந்தே இருப்பது
ஆழ்கடலையும் விஞ்சிய ஆழமானது !

எம் ஆற்றல்களையும் ஆளுமைகளையும்
காணும் முன்பே அழைத்து விட்டானே
காலனும் பாதி வயதினிலே
காலமெல்லாம் நினைத்திடுவோம்
கண்ணான எம் தந்தையை !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 30,05,2019

பகிரவும்...