Main Menu

ஜேர்மனியில் 5 குழந்தைகள் சடலமாக கண்டெடுப்பு: குழந்தைகளின் தாய் தற்கொலை முயற்சி!

மேற்கு ஜேர்மனிய நகரமான சோலிங்கனில் உள்ள ஒரு பெரிய வீட்டுத் தொகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்து குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அருகிலுள்ள டுசெல்டார்ஃப் ரயில் நிலையத்தில் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் முன், 27 வயதான தாய் குழந்தைகளை கொலை செய்ததாக சந்தேகிப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இறப்புக்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லாமல், சில விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் நகரின் ஹாசெல்டெல் பகுதியில் உள்ள குடியிருப்புத் தொகுதிக்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

உள்ளூர் நேரப்படி சுமார் 13:45 மணிக்கு வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ள சோலிங்கனில் உள்ள கட்டிடத்திற்கு வந்த பொலிஸார், மூன்று பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளின் சடலங்களை கண்டெடுத்தனர்.

இதன்போது, ஆறாவது குழந்தையான 11 வயது சிறுவன் உயிர் பிழைத்ததாகக் கூறப்படுகிறது.

முன்செங்லாட்பாக் நகரில் 60 கி.மீ (37 மைல்) தொலைவில் வசிக்கும் குழந்தைகளின் பாட்டி, அவசரகால சேவைகளை அழைத்ததாக ஜேர்மன் செய்தி வலைத்தளம் பில்ட் தெரிவித்துள்ளது.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயிடம், சிகிச்சைக்கு பின் விசாரணை நடத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா அல்லது எவ்வாறு குழந்தைகள் உயிரிழந்தன என்பது குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...