Main Menu

நோய்வாய்பட்ட ஜெர்மன் சிறுவனுக்கு பதிலாக பள்ளிக்கு சென்று பாடம் படிக்கும் ரோபோ

கொரோனா பரவல் அதிகரிப்பால் எதிர்காலத்தில் இதுபோன்ற மாற்றங்கள் நிகழும் என்று பெர்லின் நகர கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் தலைநகர் பெர்லின் மாநகரில் அமைந்துள்ளது புஸ்டெப்ளூம்-கிரண்ட்சூல் தனியார் பள்ளி. இதில் படிக்கும் 7 வயது மாணவன் ஜோசுவா மார்டினாஞ்செலி, நுரையீரல் பாதிப்பு நோயால் அவதிப்பட்டு வருகிறான். இதனால் அவனால் தினமும் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்று ஜோசுவா தாயார்  சிமோன் மார்டினாஞ்செலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த  மர்ஷான் ஹெல்லர் மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. அதன்படி செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ரோபோ ஒன்று வாங்கப்பட்டு,  மாணவன் ஜோசுவாவுக்கு பதிலாக பள்ளிக்கு சென்று பாடம் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

மாணவன் ஜோசுவா

இப்போது மாணவன் ஜோசுவா அந்த ரோபோ மூலம் பள்ளி ஆசிரியர் மற்றும் தமது வகுப்பு தோழர்களை தொடர்பு கொள்ள முடிகிறது. ஜோசுவா அனுப்பும் தகவல்களை அந்த ரோபோ பிரதிபலிக்கிறது.  பாடவேளை இல்லாத சில சமயங்களில் ரோபோ மூலம் ஜோசுவா தமது தோழர்களுடன் அரட்டை அடிக்க முடிகிறது என பள்ளி தலைமை ஆசிரியர் வின்டர்பெர்க் தெரிவித்துள்ளார்.  
கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிக்கு வர முடியாத குழந்தைகளுக்காக ரோபோக்களை பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி  டார்ஸ்டன் குஹ்னே தெரிவித்துள்ளார். பெர்லின் பள்ளிகளுக்காக நான்கு ரோபோக்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும்,  தொற்று பரவல் காலத்திற்கு மட்டுமின்றி எதிர்காலத்திலும் இது போன்ற மாற்றங்களுக்கு இது பயன்படும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 
ரோபோ பள்ளிக்கு வந்து படித்தாலும் தமது தோழர் ஜோஷ்வா  உண்மையில் பள்ளிக்கு வர முடிந்தால் அதைதான் நான் விரும்புகிறேன் என்று அவரது வகுப்புத் தோழர் பெரிடன் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...