Main Menu

சாலையோர கடையில் தேநீர் அருந்திய ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ்

இந்தியாவுக்கு வருகை தரும்படி ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சுக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, அவர் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் நேற்று காலை டெல்லி வந்தடைந்தார். அவரது இந்த பயணத்தில் ஜெர்மனியின் மூத்த அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அளவிலான வர்த்தக குழுவினரும் வந்துள்ளனர். ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அதன்பின், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர். ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக ஜெர்மனி திகழ்கிறது என பிரதமர் மோடி பேசினார். இந்தச் சந்திப்பில், இருதரப்பு, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தப் பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அதிபர் ஸ்கால்ஸ் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், ஜெர்மன் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது: சுவை மிகுந்த ஒரு கப் தேநீரை குடிக்காமல் இந்தியாவை நீங்கள் எப்படி அனுபவிக்க முடியும்? ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சை டெல்லியின் சாணக்யாபுரி பகுதியின் சாலையோரத்தில் உள்ள எங்களது விருப்பத்திற்குரிய தேநீர் கடை ஒன்றுக்கு அழைத்துச் சென்றோம். அந்தக் கடையில், அதிபர் ஸ்கால்ஸ் ஒரு தேநீர் வாங்கி அருந்திய காட்சிகளும், உடன் ஜெர்மனி தூதர் நிற்பது போன்ற புகைப்படங்களை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதன்பின்னர் தேநீர் கடைக்காரர்களுடன் ஒன்றாக சேர்ந்து ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் குழு புகைப்படம் ஒன்றும் எடுத்துக் கொண்டார்.

பகிரவும்...