Main Menu

ஜேர்மனியில் கொவிட் தடுப்பூசிக்கு பதிலாக உப்புக் கரைசலை செலுத்தினாரா செவிலியர்? விசாரணைகள் ஆரம்பம்!

ஜேர்மனியில் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்குப் பதிலாக, ஒரு செவிலியர் உப்புக்கரைசலை செலுத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் 8,557 முதியோர்களை மீண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி ஜேர்மனி அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் 3,600 பேருக்கு இதற்கான முன்பதிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

வடக்கு கடற்கரை அருகே உள்ள ஃப்ரீஸ்லாந்து என்ற இடத்தில் உள்ள தடுப்பூசி மையம் ஒன்றில் இந்த செவிலியரின் செயற்பாடு குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் 6 பேருக்கு மட்டுமே இப்படி உப்புக்கரைசல் ஊசி போடப்பட்டதாக நம்பப்பட்டது. இப்படி தடுப்பூசி மருந்துக்குப் பதில் உப்புக்கரைசல் செலுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

ஒரு தடுப்பூசி மருந்துக்குப்பி கைதவறி விழுந்து உடைந்துவிட்டதாகவும், அதை மறைக்க 6 பேருக்கு உப்புக்கரைசல் செலுத்திவிட்டதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் அந்த செவிலியர் ஒப்புக்கொண்டார். ஆனால், பொலிஸ் விசாரணையில் இன்னும் நிறைய பேருக்கு தடுப்பூசி மருந்துக்குப் பதில் உப்புக்கரைசல் செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அதிக சாட்சிகளை பொலிஸார் விசாரணை செய்கிறார்கள். ஆனால், இன்னும் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பொலிஸார் இறுதி செய்யவில்லை.

பகிரவும்...