Main Menu

சர்வதேச தாய்மொழி தினத்திற்கான சிறப்புக்கவி “ தமிழும் நானும் “

பொதிகை மலையில் பிறந்து
மதுரைச் சங்கத்தில் வளர்ந்து
மொழிகளுக்கு எல்லாம் தாயாகி
தாய்போல எனைக்காத்து
தாலாட்டிய தமிழே
செம் மொழியாகி சிறந்து நிற்பவளே
தமிழே என் உயிருக்கு உயிரானவளே
உனைப் போற்றுகின்றேன் நான் !

நிலவும் வானும் போல்
மலரும் மணமும் போல்
என்னோடு வாசம் செய்வாய்
கண்ணோடு கதை சொல்வாய்
கருத்தோடு மோதச் செய்வாய்
நீயே என் மூச்சு நீயே என் பேச்சு
நீயின்றி நானில்லையே !

தாய்த்தமிழே என்னுயிரே
நறுந்தேனாய் என்னுள் ஊறி
அமிர்தமாய் நான் பருகிய மொழி
தோழியாய் உறவாடும் மொழி
உதிரத்தில் கலந்து உணர்வாகிய மொழியே
உனைப் போற்றுகின்றேன் நான் !

எங்கும் நீ எதிலும் நீ
எண்ணம் நீ எழுத்தும் நீ
வண்ணம் நீ வாழ்வும் நீ
வனப்பும் நீ வாசனையும் நீ
இலக்கியச் செழுமை நீ
இலக்கணப் புலமை நீ
இதயத்தைத் தொட்டவள் நீ
எல்லை இல்லாத் தொன்மை நீ !

தமிழே என்னுயிரே
நீ தோன்றிய போது நானில்லை
நான் வாழும் போது
நீயே என் வாசமுல்லை
உனக்கு நிகர் இங்கு எதுவுமில்லை
உன்போல் இனிமை எதிலுமில்லை !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன்……(B.A)

பகிரவும்...