Main Menu

கைத்தடம் பற்றி……..(மாற்றுத் திறனாளிகள் தினத்திற்கான சிறப்புக்கவி)

மாற்றுக் கருத்துக்கள் ஏதுமின்றி
மாற்றுத் திறனாளிகளுக்காய்
மார்கழித் திங்கள் மூன்றினை
மகத்துவமாக்கியதே ஐ.நா.வும்
மாற்றத்திற்கான விதையாக
முன்னேற்றப் பாதையாக
ஏற்றி வைத்ததே ஒளிவிளக்கை
கைத்தடம் பற்றிச் செல்வோம் நாமும் !

சாதிக்கத் துடிப்பவர்களை
குறைபாடுகளை எதிர்த்து நின்று
எதிர்நீச்சல் அடிப்பவர்களை
உலகை வென்று சாதிக்க
உடலை வென்று தடையை உடைத்து
உறுதியோடு உழைக்கும்
உன்னத மாற்றுத் திறனாளிகளை
கைத்தடம் பற்றிச் செல்வோம் !

கண்கள் இருந்தும் குருடராய் வாழும்
நம்மவர்கள் மத்தியிலே
கழுத்திற்கு கீழே
உறுப்புகள் ஏதும் செயற்படாத போதும்
சக்கர நாற்காலியில் இருந்து
சக்கரமாய் உலகைச் சுற்றி
சாதிக்கும் மாற்றுத் திறனாளிகள்
போற்றுதற்கு உரியவர்களே !

இயற்கை கொடுத்த சோதனையை
வேதனையாய் நினைக்காமல்
சாதனை படைத்திட
தடைகள் பல தாண்டி
பல்வேறு துறைகளிலும்
தடம் பதித்திருக்கும் திறனாளிகளை
கைத்தடம் பற்றிச் செல்வோம் !

வலிகளையும் சுமைகளையும் தாங்கி
வாழ்வுப் பயணத்தில்
புதியவழி கண்டவர்களை
மாற்றுவழி தொடர்ந்த
மாற்றுத் திறனாளிகளை
கைத்தடம் கொடுத்து உதவிடுவோம் !

உலகையே மாற்றியமைக்கத் துடிக்கும்
மாற்றுத் திறனாளிகளை
வேற்று மனிதராய் நினைக்காமல்
ஆற்றலுக்கு தளம் கொடுத்து
கைத்தடம் பற்றியே
உலகை வென்றிட வைத்திடுவோம்

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 03.12.2020

பகிரவும்...