Main Menu

“கேலிச்சித்திர நாயகன்” (சிரித்திரன் சுந்தர்) நினைவுக்கவி

கலை இலக்கியவானை
வட்டமிட்ட சித்திரக் கலைஞன்
கேலிச்சித்திர நாயகன்
மாமனிதர் சிவஞானசுந்தரம்
சிரித்திரன் சுந்தரென அழைக்கப்பட்டார் சிறப்போடு
பங்குனித் திங்கள் மூன்றினிலே உதித்து
அதே பங்குனித் திங்கள் மூன்றிலே
இவ்வுலகை விட்டு ஏகினாரே !

சிரித்திர நாயகன் பத்திரிகையாளனாய்
பதிப்பாசிரியராய் படைப்பாளியாய்
ஆசிரியராய் எழுத்தாளனாய்
பன்முகத் திறனோடும் ஆற்றலோடும்
பவனி வந்தாரே கலையுலகில் !

சிந்தனைச் சிறப்பாலும்
கேலிச் சித்திரங்களாலும்
கருத்து ஓவியங்களாலும்
சிரித்திரன் இதழ் மூலம்
சிந்தனையைத் தூண்டி
ஈழத்து இலக்கியப் பரப்பை வனப்பாக்கினாரே !

சிந்தனைத் துளிகளை
சித்திரமாய் தீட்டி
சவாரித்தம்பர் மைனர் மச்சான்
மகுடி பதில்களென
அணி சேர்த்தார் இதழியலுக்கு
ஆண்டுகள் முப்பத்தியிரண்டாக
அயராமல் வெளியிட்டார் சிரித்திரனை !

ஈழத்து நகைச்சுவைக்கு
அணி சேர்த்த நகைச்சுவையாளன்
நகைச்சுவை துணுக்குகளை
நவரசமாய் அள்ளித் தந்து
அங்கதசுவையோடு அளவளாவி
அனைவரையும் மகிழ்வித்த கலைஞன் !

மொழியில்லாத கலைக்கோலத்தை
சித்திரக்கலையின் வண்ணத்தை
சிந்தனைப் பொக்கிஷத்தை
அழகியலாக்கிய கலைஞன்
கேலிச்சித்திர நாயகன்
நிரந்தரமாக விடைபெற்றாரே
பங்குனித் திங்கள் மூன்றினிலே !

ரஜனி அன்ரன் (B.A) 03.03.2021

பகிரவும்...