Main Menu

“ கற்றவை கற்றபின்..” 24.01.2020 (சர்வதேச கல்வி தினத்திற்கான சிறப்புக் கவி )

கரை காண முடியாத
கல்விச் சமுத்திரத்திற்குள்
முக்குளித்து முத்தெடுத்து
ஐயம் திரிபறக் கற்றபின்
கற்றதை நாம் பெற்றதை
மற்றவர்க்கு கொடுத்து
கற்றதன் பயனைப் பெற்று
பற்றுடன் வாழ்ந்திடுவோம் !

கற்கும் போது கல்வி கசக்குமே பாகலாய்
கற்ற பின்பு பட்டம் பெற்ற பின்பு
கற்றதன் பயன் இனிக்குமே அதிரசமாய்
தாய் நிலத்தின் கல்விப்பணி
புலத்திலும் கைகொடுத்ததே எனக்கு !

புலத்து வாழ்வினில் புலத்து மொழியிலும்
புலமை பெற்று புலத்து சிறார்களுக்கு
நான் கற்றதைப் பெற்றதை
கனிவோடு கொடுக்கும் போது
கடமையுணர்வு கட்டியம் கூறிடுமே !

எல்லை இல்லாக் கல்வியை
காலத்தால் அழியாத கல்வியை
உலகையே மாற்றிடும்
சக்தி கொண்ட கல்வியை
கற்றது நாம் கையளவு மட்டுமே
கல்லாததை கணக்கிடவும் முடியாதே !

புதிது புதிதாக கற்கிறேன் புலத்திலே
அறிதலும் புரிதலும் விருந்தாக
ஆய்வினைத் தொடர்கிறேன் தேடலோடு
கற்றதைப் பெற்றதைக் கொடுக்கிறேன்
கல்விப் பணியோடும் தொடர்கிறேன்
கற்றவை கற்றபின் உணர்கிறேன் நானும்
கல்வியின் எல்லையில்லாப் பெருமையினை !

பகிரவும்...