Main Menu

“கறுப்பு ஆடி”

ஆடிமகள் ஆடி தோறும்
தேடி எமை வந்து
கோடி இன்பம் தந்தாலும்
எத்தனை ஆடிகள் தான்
ஓடியே போனாலும்
கறுப்பு ஆடியின்
கனத்த நினைவுகள்
மீண்டும் மீண்டுமாய்
நினைவிலே வருகுது
மாண்டவர் துயரினை ஞாபகமாக்குது !

வீடுகள் கடைகள் உடைப்பு
உடமைகள் கொள்ளை அடிப்பு
உயிர்கள் பலவாய் இறப்பு
உயிரோடு பலரும் எரிப்பு
ஓடி ஒழிந்தவரை
அடைக்கலம் தேடியவரை
தேடித் தேடி அழித்த கொடுமை
மீண்டும் மீண்டுமாய் மனசிலே வருகுதே !

மாண்டு போனவர் – இனி
மீண்டு வாரார் மீளவும் வாரார்
ஆண்டுகள் முப்பத்தியாறு
தாண்டிய போதிலும்
கறுப்பு ஆடியின் ஆறாத்துயரம்
வெறுப்பையே தந்து
தூண்டும் உணர்வால்
மீண்டும் மீண்டுமாய்
இதயம் வலிக்குதே !

போராட்டம் வெடிக்கவும்
புலம் பெயரவும்
அகதி அந்தஸ்து கோரவும்
ஆழுமையோடு புலத்தில் வாழவும்
அடித்தளம் தந்த ஆடியே
மீண்டும் மீண்டுமாய் நினைக்கிறேன் நானும் !

இனத்தின் பெயரால்
மதத்தின் பெயரால்
மொழியின் பெயரால்
இனியொரு துயரம்
வேண்டவே வேண்டாம்
மீண்டுமாய் வேண்டாமே
மனிதம் வாழட்டும்
மகத்துவம் சிறக்கட்டும் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...