Main Menu

“ஏதிலிகள் “ (சர்வதேச அகதிகள் தினத்திற்கான சிறப்புக்கவி)

போராலும் போராட்டங்களாலும்
வன்முறையாளர்களின் வன்முறைகளாலும்
வாழ்ந்த நாட்டை விட்டு வீட்டை விட்டு
அண்டை அயல் நாடுகளை
ஐரோப்பிய நாடுகளை நோக்கி
ஏதிலிகளென்ற பெயரும் தாங்கி
அடைக்கலம் தேடியவர்கள் இவர்கள் !

தம் உயிரைக் காப்பாற்ற
உயிர்களையே பணயம் வைத்து
உத்தரவாதமில்லாத கடல் பயணங்களையும்
அச்சுறுத்தலான எல்லைகளையும் கடந்து
அடைக்கலம் தேடி
உயிரைக் கையில் பிடித்தபடி
தேசம் தாண்டி வந்தவர்களே இந்த ஏதிலிகள் !

பாதுகாப்பாக இருப்பதற்கு ஓரிடமும்
பச்சிளங் குழந்தைகளுக்கு ஒருவேளை உணவும்
நிம்மதியாக உறங்க ஓரிடமும் வேண்டி
இருள் சூழ்ந்த வாழ்வில்
ஒளி தான் கிடைக்குமோவென
ஏக்கத்தோடு வாழும் ஏதிலிகள் இவர்கள் !

ஆண்டு தோறும் அகதிகள் தினமும்
அமைதியாகவே வருகிறது
ஆனாலும் ஏதிலிகளின் வருகை
இன்னும் குறைந்த பாடில்லை
போர்கள் நிறுத்தப்படாத வரை
வன்முறைகள் ஒழிக்கப்படாத வரை
முதலாளித்துவத்தின் தலையீடு இருக்கும் வரை
ஏதிலிகளின் வருகையும் தொடர்கதையே !

ஏதிலிகளுக்கு ஆதரவு வழங்கவும்
ஏதிலிகள் பற்றிய விழிப்புணர்வை
எல்லோருக்கும் தெரியப் படுத்தவும்
ஆண்டு தோறும் ஏதிலிகள் தினத்தை
அவனியில் அமுலாக்கியதே ஐ.நா.வும்
ஆனித் திங்கள் இருபதினை
அனைத்துலக அகதிகள் தினமாக !

ரஜனி அன்ரன் (B.A) 20.06.2020

பகிரவும்...